அன்பில் மகேஸ் pt web
தமிழ்நாடு

ஊழல் புகார் | அன்பில் மகேஸ் தொடர்புடைய இடங்களில் சோதனை.. கிடைத்தது என்ன?

பள்ளிக்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவருக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் மத்திய குற்றப்பிரிவு மற்றும் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர்.

PT WEB

செய்தியாளர் - ராஜ்குமார்.ர

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திமுக ஆட்சிக் காலத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அவர் தோல்வியடைந்திருந்தார். அமைச்சராக இருந்த 2021–2026 காலகட்டத்தில், தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம், பள்ளி தர உயர்வு, DTCP அனுமதி உள்ளிட்ட அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக, Federation of Associations of Private Schools in Tamil Nadu அமைப்பின் செயலாளர் இளங்கோவன், சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பி.டி. அரசகுமார் உள்ளிட்ட மூவர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

anbil magesh

இதுவரை குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகள், அலுவலகங்கள், பள்ளி வளாகங்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் அமைந்துள்ள DPI வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல கட்டங்களாக சோதனை நடைபெற்றுள்ளது. பள்ளிக்கல்வித்துறை மற்றும் அரசு அலுவலகங்களைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள், தனியார் பள்ளிகளின் பதிவுகள், அரசு அலுவலகங்களுக்கு அளிக்கப்பட்ட மனுக்கள், நிதிப் பரிவர்த்தனை பதிவுகள், செல்போன்கள், கணினிகள், ஹார்டு டிஸ்க்குகள் உள்ளிட்ட டிஜிட்டல் ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், 177 தனியார் பள்ளிகளிடமிருந்து பல கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. மேலும், தொடர்ந்து புகார்கள் பெறப்பட்டு வருவதாகவும், நிதி மோசடி தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் தொடர்புடைய நபர்களின் வங்கிக் கணக்குகள் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விசாரணையில் கிடைத்த சாட்சியங்களின் அடிப்படையில், அப்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, அவருக்குச் சொந்தமான சென்னை மற்றும் திருச்சியில் உள்ள 4 இடங்களிலும், அவரது உதவியாளர் வாலாடி கார்த்திக்குடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சென்னை மற்றும் திருச்சியில் உள்ள 2 இடங்களிலும், இன்று காலை முதல் போலீசார் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர். சோதனை குறித்து தகவலறிந்த அன்பில் மகேஸின் வழக்கறிஞர்களான தினகரன், பாலசுப்ரமணியம் மற்றும் அவர்களது சட்டக் குழுவினர் சோதனை நடைபெற்ற இல்லத்திற்குச் சென்றனர்.

anbil magesh

அவர்கள் வீட்டிற்குள் செல்ல முயன்றபோது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த திருச்சி மாநகர காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதையடுத்து, வீட்டின் வெளியே திரண்டிருந்த நூற்றுக்கணக்கான திமுக ஆதரவாளர்கள் காவல்துறைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இந்தச் சோதனைக்கு திமுக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின், “மாநிலத்தை உலுக்கி வரும் பிரச்னைகளை கண்டுகொள்ளாமல் முதலமைச்சர் லண்டனில் ஷூட்டிங்கில் ஈடுபட்டுள்ளார். மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் மீது ரெய்டு அஸ்திரம் ஏவப்பட்டுள்ளது. இந்த அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை சட்டரீதியாக எதிர்கொள்வோம். பொய்யான குற்றச்சாட்டுகள் சட்டத்தின் முன் நிலைக்காது” என தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார்.