தமிழ்நாடு

பணப்பட்டுவாடா புகார்: அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் திடீர் ரெய்டு

webteam

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று காலை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா அணி வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பணப்பட்டுவாடா நடப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறிவருகின்றனர். இதுதொடர்பான வீடியோ ஆதாரங்களும் வெளியாயின. அவருக்கு ஆதரவாக தமிழக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் ஆகியோர் ஆர்.கே.நகரில் பிரசாரம் செய்துவருகின்றனர்.

இந்நிலையில் டிடிவி தினகரனின் ஆதரவாளரும் அமைச்சருமான விஜயபாஸ்கர் வீட்டில் திடீரென வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் பணப்பட்டுவாடா புகாரின் பேரில் இந்தச் சோதனை நடப்பதாகக் கூறப்படுகிறது. அவருக்குச் சொந்தமான வீடு, கல்லூரி, கல் குவாரி உள்ளிட்ட இடங்களில் இந்தச் சோதனை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை, சென்னை உட்பட 30 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

அதிமுக முன்னாள் எம்.பி சிட்லபாக்கம் ராஜேந்திரன், எம்ஜிஆர் மருத்துவ பல்கலை.துணைவேந்தர் கீதாலட்சுமி வீட்டிலும் வருமானவரி சோதனை நடந்துவருகிறது.