தமிழ்நாடு

தமிழகம் வருகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி

webteam

தேர்தல் பரப்புரைக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வரும் 13ம் தேதி தமிழகம் வர உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான நடவடிக்கைகள் சூடு பிடித்துள்ளன. தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகள் கூட்டணியை அறிவித்துவிட்டன. இன்னும் சில கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, புதிய தமிழகம் உறுதியாகிவிட்ட நிலையில் தேமுதிகவுடன் கிட்டத்தட்ட கூட்டணி முடிவாகிவிட்டது. மறுபுறம் திமுகவுடன் காங்கிரஸ், மதிமுக, விசிக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு புதுச்சேரியில் ஒரு தொகுதியும், தமிழகத்தில் 9 தொகுதிகளும் என 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக வரும் 13ம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வருகிறார் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். இன்று சென்னை சத்யமூர்த்தி பவனில் நடைபெற்ற தமிழக காங்கிரஸ் கூட்டத்துக்கு பிறகு இதனை அவர் தெரிவித்தார். ராகுல்காந்தியுடன், பிரியங்கா காந்தியும் வரலாம் என்றும் தென் தமிழகத்தில் தனது பிரச்சாரத்தை ராகுல் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரதமர் மோடி தமிழகத்திற்கு  இரண்டு முறை வந்து பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பரப்புரை செய்துள்ள நிலையில் காங்கிரசும் தனது பரப்புரையை தொடங்கவுள்ளது.