தமிழ்நாடு

"தமிழர் பாரம்பரியத்தை காக்கவேண்டியது என் கடமை!" - அவனியாபுரத்தில் ராகுல் பேச்சு

Sinekadhara

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, தமிழ் கலாசாரம் மதிக்கப்பட வேண்டும் என்றும், தமிழர் பாரம்பரியத்தைக் காக்கவேண்டியது தன் கடமை என்றும் கூறினார்.

பொங்கல் பண்டிகையையொட்டி இன்று மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரில் கண்டு ரசித்தார், காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி. அவனியாபுரம் வந்த அவரை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் எம்.பிக்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளைக் கண்டு ரசித்த அவர், தமிழ் கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் காக்கவேண்டியது தன் கடமை என்று பேசியுள்ளார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், ’’தமிழக மக்களுக்கு வணக்கம். ஜல்லிக்கட்டில் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ் கலாசாராம், பாரம்பரியம் இந்தியாவிற்கு இன்றியமையாதது; அது மதிக்கப்பட வேண்டும். தமிழ் மக்களுடன் நின்று அவர்களின் வரலாற்றை, பாரம்பரியத்தை காக்கவேண்டியது என் கடமை. உங்களது உணர்ச்சிகளையும், கலாசாரத்தையும் ரசித்து பாராட்டவே வந்துள்ளேன்’’ என்று கூறினார்.

முன்னதாக, ஜல்லிக்கட்டுப் போட்டிகளை திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதியுடன் சேர்ந்து ரசித்தார் ராகுல் காந்தி.