தமிழ்நாடு

புயலால் பாதிக்கப்பட்ட 50 வீடுகளை கட்டிக்கொடுக்கும் ராகவா லாரன்ஸ்

புயலால் பாதிக்கப்பட்ட 50 வீடுகளை கட்டிக்கொடுக்கும் ராகவா லாரன்ஸ்

webteam

கஜா புயலால் பாதிக்கப்பட்ட 50 பேருக்கு வீடுகள் கட்டித்தரவுள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். 

கஜா புயலால் 12 மாவட்டங்கள் பாதித்துள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். தமிழக அரசு மீட்புப்பணிகளில் ஈடுபடு வருகிறது. அத்துடன் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தானும் உதவிகளை செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “கஜா புயல் பாதித்த மாவட்ட மக்கள் படும் வேதனையையும் துயரத்தையும் பார்க்கும் போது வேதனை அடைந்தேன்.. எவ்வளவோ நல்ல உள்ளம் உள்ளவர்களும், அரசாங்கமும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். புயலால் ஒரு வீடு முற்றிலும் இடிந்து நிர்கதியாய் நிற்கும் குடும்பம் ஒன்றை பார்த்தேன். அந்தக் குடும்பத்திற்கு வீடு கட்டிக்கொடுக்கவுள்ளேன். அந்த வீட்டை மட்டுமல்ல; இது மாதிரி இடிந்து முற்றிலும் பாதிக்கப்பட்ட 50 வீடுகளை கட்டித்தர உள்ளேன். 

பாதிக்கப்பட்டவர்கள் எங்களை தொடர்பு கொண்டால் நானே நேரிடையாக பாதிக்கப்பட்ட பகுதிக்குச் சென்று வீடு கட்டித்தந்து, அவர்கள் வாழ்வுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த உள்ளேன். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பார்கள்.. நான் அவர்கள் மூலம் இறைவனைக் காண முயற்சி செய்கிறேன். உங்கள் பார்வைக்கு இது மாதிரி பாதிக்கப்பட்டவர்கள் பற்றி ஏதாவது தகவல் வந்தாலும் எங்களிடம் தெரிவிக்கவும்.” என தெரிவித்துள்ளார்.