ராகவா லாரன்ஸ் - விஜய் web
தமிழ்நாடு

திருச்சி கிழக்கில் போட்டியா..? ராகவா லாரன்ஸ் வைத்த சஸ்பென்ஸ்!

திருச்சி கிழக்கு தொகுதியில் ராகவா லாரன்ஸ் போட்டியிடவிருப்பதாக செய்தி பரவிய நிலையில், அதுகுறித்து பதிலொன்றை அளித்துள்ளார் ராகவா லாரன்ஸ்.

Rishan Vengai

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலைச் சுற்றி பரவும் ஊகங்களுக்கு பதிலளித்து, அங்கு தவெக சார்பில் போட்டியிடுவார் என்ற செய்தியை ராகவா லாரன்ஸ் நேரடியாகத் தெளிவுபடுத்தாமல் சஸ்பென்ஸை நீட்டித்துள்ளார். ‘பென்ஸ்’ படப்பிடிப்பு 10ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், தனது வாழ்க்கை குறித்த முக்கிய முடிவை 11ஆம் தேதி காலை 9.30க்கு அறிவிப்பதாக கூறி அரசியல் ஆர்வத்தை தூண்டியுள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் முதல்வர் விஜய் வெற்றிபெற்ற நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விஜய் ராஜினாமா செய்தார். இதனால் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படவிருக்கிறது.

திருச்சி கிழக்கில் தவெக ஆதரவுடன் விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிடுவார் என சொல்லப்பட்ட நிலையில், அவர் அதை முற்றிலுமாக மறுத்துள்ளார். முதல்வர் விஜயும் திருச்சி கிழக்கில் மக்கள் முகமாக ஒருவர் நிறுத்தப்படுவார் எனக் கூறியிருந்தார்.

இந்தசூழலில் தான் திருச்சி கிழக்கு தொகுதியில் நடிகரும், சமூக சேவையாளருமான ராகவா லாரன்ஸ் தவெக சார்பில் போட்டியிடப்போவதாக செய்திகள் பரவின. இதுகுறித்து அதிகமாக பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது ராகவா லாரன்ஸ் விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.

முக்கியமான முடிவு அறிவிக்கப்படும்..

இதுகுறித்து விளக்கம் ஒன்றை கொடுத்திருக்கும் ராகவா லாரன்ஸ், “அனைவருக்கும் வணக்கம், நான் திருச்சி கிழக்குத் தேர்தலில் போட்டியிடுவது குறித்த செய்தி பல்வேறு ஊடகங்களில் பரவி வருகிறது. எனது ஊடக நண்பர்கள் அனைவரும் தொலைபேசியில் என்னைத் தொடர்புகொண்டு, இதுகுறித்து விளக்கம் கேட்டு என்னைச் சந்திக்கக் கோரி வருகின்றனர்.

இந்த யூகங்கள் ஒரு கட்டத்தில் இதற்குப் பதிலளிக்க வேண்டும் என்று நான் உணரும் அளவுக்கு வளர்ந்துவிட்டதால், இந்தக் குறிப்பைப் பகிர விரும்புகிறேன்.

நான் தற்போது 'பென்ஸ்' படப்பிடிப்பில் மும்முரமாக இருக்கிறேன், எனது படப்பிடிப்பு 10ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

என் தாயின் ஆசீர்வாதங்களுடன், என் வாழ்க்கை தொடர்பான ஒரு முக்கிய முடிவு வரும் 11ஆம் தேதி, வியாழக்கிழமை காலை 9:30 மணிக்கு அறிவிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.