தமிழ்நாடு

சிகரெட்டுக்கு பணம் கேட்டதால் ஆத்திரம்! ஓட்டல் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல்!

webteam

சென்னையில் உணவகத்தில் சிகரெட் வாங்கியதற்கு பணம் கேட்டதால் ஏற்பட்ட தகராறில் பத்து பேர் கொண்ட கும்பல் கடை ஊழியர்களை கட்டையால் அடித்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வானியன் சாவடி ஜேஜே நகரில் தனியார் பிரியாணி கடை ஒன்றை கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாக அஸ்புல்லா என்பவர் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடையை மூடிவிட்டு சென்றுள்ளனர். பிறகு வீட்டில் குழந்தைகளுக்கு பால் எடுப்பதற்காக 11:30 மணி அளவில் கடை ஊழியர்கள் கடையை திறந்து உள்ளனர். அப்போது கடைக்கு வந்த இரண்டு இளைஞர்கள் சிகரெட் கேட்டிருக்கின்றனர். சிகரெட்டை கொடுத்த கடை ஊழியர்கள் சிகரெட்டிற்கு பணம் கேட்டபோது போதையில் இருந்த இருவரும் பணத்தை கொடுக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து கடை ஊழியர்களுக்கும் சிகரெட் வாங்க வந்த இளைஞர்களுக்கும் கைகலப்பாகி தள்ளுமுள்ளு ஏற்பட்டிருக்கிறது. அருகில் இருந்தவர்கள் அவர்களை விலக்கிய போது ரோந்து பணிக்கு அந்த வழியாக வந்த காவலர்கள் சம்பவத்தை அறிந்து காவல் நிலையத்திற்கு இரண்டு இளைஞர்களையும் அழைத்துச் சென்று இரவு முழுவதும் இருவரையும் காவல் நிலையத்தில் வைத்திருந்த நிலையில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு ஹோட்டலின் உரிமையாளர் அஸ்புல்லா காவல் நிலையம் சென்று வழக்கு தொடுக்க வேண்டாம் சமாதானமாக போய் விடுகின்றோம் என்று எழுதிக் கொடுத்து வந்திருக்கின்றார்.

இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் திடீரென கடைக்குள் மாஸ்க் அணிந்த பத்து நபர்கள் கம்பு, கட்டை, கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கடைக்குள் வந்து கடையில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கியதுடன் கடையில் இருந்த ஊழியர்களையும் பலமாக தாக்கியுள்ளனர். வியாபாரத்திற்காக தயார் செய்து வைத்திருந்த பிரியாணி உள்ளிட்ட உணவுகளையும் கீழே தள்ளி கொட்டியுள்ளனர். அப்போது “இந்த தெருவில் வசிக்கும் எங்களிடமே பணம் கேட்கிறாயா? பணம் கேட்டால் கொலை தான் செய்வோம்” என்றும் மிரட்டி அடித்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து கடை உரிமையாளர் அஸ்புல்லா கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றார். கடை உரிமையாளர் அஸ்புல்லா உள்ளிட்ட ராஜா முகமது, பகுராத்தூர், மைதீன் ஆகிய நான்கு நபர்களுக்கு காயங்கள் ஏற்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருக்கின்றனர். இரண்டு குழுக்களாக ஏழு போலீசார் நியமித்து குற்றவாளிகளை தேடி வருவதாகவும் இன்று காலை கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகரெட் வாங்கியதற்கு பணம் கேட்டதால் ரவுடி கும்பல் கடையை துவம்சம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.