தமிழ்நாடு

ராதாபுரம் தொகுதி வெற்றி மாறுமா..?: இன்று மறுவாக்கு எண்ணிக்கை

ராதாபுரம் தொகுதி வெற்றி மாறுமா..?: இன்று மறுவாக்கு எண்ணிக்கை

Rasus

ராதாபுரம் தொகுதி தேர்தல் வழக்கில், உயர்நீதிமன்றத்தில் இன்று மறுவாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், இதற்கு எதிராக அதிமுக எம்எல்ஏ இன்பதுரை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69, 90‌ வாக்குகளுடன் வெற்றி பெற்‌றதாக அறிவிக்கப்பட்டது. திமுக வேட்பாளர் அப்பாவு 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இன்பதுரை வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பாவு வழக்கு தொடர்ந்தார். அதில் 19, 20, 21 ஆகிய கடைசி 3 சுற்றுகளில் பதிவான வாக்குகள் முறையாக எண்ணப்படவில்லை எனவும், செல்லாதென அறிவிக்கப்பட்ட 203 தபால் வாக்குகள் 1996-ஆம் ஆண்டின் அரசாணைப்‌படி செல்லும் எனவும் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், செல்லாது என அறிவிக்கப்பட்ட 203 தபால் வாக்குகளையும், 19, 20, 21 ஆகிய சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்குகளையும் மறு எண்ணிக்கை செய்யும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

உடனே இதனை எதிர்த்து இன்பதுரை சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்த மனுவிற்கு மூன்று வாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற இன்பதுரை கோரிக்கையை நிராகரித்து அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் 203 தபால் வாக்குகளையும், 19, 20, 21 ஆகிய கடைசி 3 சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்கு இயந்திரங்களையும் நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் காலை 11.30 மணிக்கு தலைமை பதிவாளர் முன்னிலையில் வாக்கு எண்ணிகை நடத்த உத்தரவிட்ட நீதிபதி, தலைமை பதிவாளர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணை நடைபெறும் என குறிப்பிட்டார்.

இதனிடையே, ராதாபுரம் தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் உள்ள பெட்டி, 3 சுற்றுக்கான 36 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆகியவை மாவட்ட ஆட்சியர் முன்‌னலையில் எடுக்கப்பட்டது. பின்னர் துணை ஆட்சியர் பால்பாண்டி தலைமையில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் வாக்குப்பெட்டிகள் சென்னை கொண்டு‌செல்லப்பட்டது

இதனிடையே உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அதிமுக எம்எல்ஏ இன்பதுரை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என இன்பதுரை சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம் பட்டியலில் வரும்போது விசாரணைக்கு ஏற்கப்படும் எனக்கூறியது. இதனிடையே இந்த வழக்கில் அப்பாவு கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளார்.