தமிழ்நாடு

4 மாவட்டங்களில் முழு முடக்கமா?: ராதாகிருஷ்ணன் விளக்கம்

4 மாவட்டங்களில் முழு முடக்கமா?: ராதாகிருஷ்ணன் விளக்கம்

webteam

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு முடக்கம் அமல்படுத்தப்படும் என்பது வதந்தியே என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை தினமும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாலும் கொரோனா கட்டுக்குள் வரவில்லை.

கொரோனாவை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே சாத்தியம் என முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்து வருகிறார். தமிழகத்தில் இதுவரை 34,914 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 307 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 24,545 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் கணிசமாக பாதிப்பு உயர்ந்து வருகிறது.

இதனைத்தொடர்ந்து சென்னை உட்பட 4 மாவட்டங்களில் முழு முடக்கம் கொண்டுவர வேண்டும் என அரசுக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது. இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் முழுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்பது வதந்தியே என சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.