தமிழ்நாடு

”ஆர்.ஏ புரம் போர்க்களம் போல உள்ளது: இவ்வளவு காலம் என்ன செய்தனர்” - கே.எஸ் அழகிரி

sharpana

”ஆர்.ஏ புரம் நகர் போர்க்களம் போல உள்ளது.சட்டத்திற்கு புறம்பாக வீடுகள் கட்டப்பட்டு இருந்தால் எதற்கு மாநகராட்சி அதிகாரிகள் மின்சாரம் அளித்தனர். இவ்வளவு காலம் என்ன செய்தனர்? ” என்று கேள்வியெழுப்பியுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.

சென்னை மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்த சாமி நகரில் சுமார் 259 வீடுகள் உள்ளது. பக்கிங்காம் கால்வாயை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் வீடுகளை இடிக்க உத்தரவிட்ட நிலையில், வீடுகளை இடிக்கும் பணி காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்றது. ஆர்.ஏ புரம் கோவிந்தசாமி நகரில் வீடுகள் இடிக்கப்படுவது எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியில் வசிக்கும் கண்ணையன் என்பவர் தீக்குளித்து அகாலமரணம் அடைந்தார். அதற்கு ஆறுதல் கூறுவதற்காக இன்று கோவிந்தசாமி நகருக்கு நேரில் வருகைத் தந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி, ”காமராஜர் நகர் கோவிந்தசாமி நகர் பகுதியில் வீடுகள் இடிக்கப்பட்டு வருவதால் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். இந்த இடம் போர்க்களம் போல உள்ளது.

சட்டத்திற்கு புறம்பாக வீடுகள் கட்டப்பட்டு இருந்தால் எதற்கு மாநகராட்சி அதிகாரிகள் மின்சாரம் அளித்தனர், இவ்வளவு காலம் என்ன செய்தனர். சட்டத்தின் பெயரால் வீடுகள் இடிக்கப்பட்டால் இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் என்ன ஆகும். தங்களுடைய ஊரில் இருந்து கொண்டு வந்த பணத்தில் இங்கு தினம்தோறும் உழைத்து சிறிய சிறிய வீடுகள் கட்டியுள்ளனர்.

எங்கோ ஒரு இடத்தில் தவறு நடந்துள்ளது. வாயில்லா மக்கள் ஏதோ காரணத்தை காட்டி நீதிமன்றம் உத்தரவு அளித்து இருக்கலாம். ஆனால், மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தப் பிரச்சனையை முதல்வரிடம் கொண்டு செல்வோம். முதல்வர் நல்ல முடிவை எடுப்பார். மக்களுக்கு இங்கு வாழ உரிமை உள்ளது. அவர்கள் வீடுகள் கட்ட அரசு அனுமதியளித்தது. தேவைப்பட்டால் நீதிமன்றத்தையும் நாங்கள் அணுகுவோம்” என்றார் கே.எஸ்.அழகிரி.