மு.க.ஸ்டாலினின் வளர்ச்சி பிடிக்காமல் அரசியல் ரீதியாக அவதூறு பரப்புகின்றனர் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
முரசொலி அலுவலம் உள்ள இடம் பஞ்சமி நிலத்தைச் சேர்ந்தது என சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன் தேசிய பட்டியலின ஆணையத்திடம் புகார் அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக தரப்பிலும் பலர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். திமுக தலைவர் ஸ்டாலினும், பஞ்சமி நிலத்தில்தான் முரசொலி அலுவலம் இருக்கிறது என்பதை நிரூபிக்க முடியுமா என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதனிடையே, முரசொலி நிலம் தொடர்பான புகார் குறித்து 19ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென அதன் நிர்வாக இயக்குநர் என்ற அடிப்படையில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதிக்கு தேசிய பட்டியலின ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், உதயநிதிக்கு பதிலாக திமுக அமைப்பு செயலாளரும், முரசொலியின் அறங்காவலருமான ஆர்.எஸ்.பாரதி இன்று சென்னை சாஸ்திரி பவனில் ஆஜரானார்.
பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “முரசொலி நிலம் தொடர்பான உரிய ஆவணங்கள் எங்களிடம் உள்ளன; ஆனால் புகார் தந்த சீனிவாசனிடம் முரசொலி இடம் பஞ்சமி நிலம் என்பதற்கான ஆதாரம் இல்லை. மேலும் அவகாசம் கேட்டுள்ளார். தலைமைச்செயலாளர் சண்முகமும் அவகாசம் கேட்டுள்ளார். மு.க.ஸ்டாலினின் வளர்ச்சி பிடிக்காமல் அரசியல் ரீதியாக அவதூறு பரப்புகின்றனர். முரசொலி நில விவகாரத்தில் பட்டியல் இனத்தவர் ஆணையர் தலையிட உரிமையில்லை” எனத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன், “முரசொலி நில விவகாரத்தில் எங்களிடம் உள்ள ஆதாரங்களை விசாரணை ஆணையத்திடம் அளித்துள்ளோம். அரசிடம் இருக்கும் ஆவணங்கள் குறித்தும் கேட்டுள்ளோம். முரசொலி நில விவகாரத்தில் ஆவணங்களை தர மாநில அரசு அவகாசம் கேட்டுள்ளது. இடைக்கால அறிக்கை தர இருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது” எனத் தெரிவித்தார்.