ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்து வாக்களிக்கலாம் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் போன்றவற்றில் ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதேபோல், மத்திய மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகளையும் வாக்களிக்க ஆவணமாகப் பயன்படுத்தலாம் என்றும், வங்கி மற்றும் அஞ்சலகம் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய கணக்குப் புத்தங்களையும் வாக்களிக்க பயன்படுத்தலாம் என்றும் கூறியுள்ளது.
பான் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மாட் கார்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை உள்ளிட்டவற்றையும் பயன்படுத்தி வாக்களிக்கலாம். அதேபோல், தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், தேர்தல் நிர்வாகத்தால் வழங்கப்பட்ட அனுமதியளிக்கப்பட்ட வாக்காளர் புகைப்படச்சீட்டு உள்ளிட்டவைகளைக் கொண்டும் வாக்களிக்கலாம்.
மேலும், நாடாளுமன்ற, சட்டமன்ற, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை மற்றும் ஆதார் எண்ணை பயன்படுத்தியும் வாக்களிக்கலாம் எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வேறொரு தொகுதியிலிருந்து மாறி வந்தவர்களின் பெயர், ஆர்கே நகர் தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தால், பழைய தொகுதியில் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்கு செலுத்தலாம் என்றும் தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்துள்ளது. எனவும் தேர்தல் ஆணையத்தால் குறிப்பிடப்பட்டுள்ள ஆதாரங்கள் இருந்தாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருந்தால் மட்டுமே வாக்களிக்க தகுதியுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.