இறந்தவர் சடலத்தை புதைப்பதில் இரண்டு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையால் போலீசார் பொதுமக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த மதுரவள்ளி மற்றும் சிறுமங்கலம் ஆகிய இரண்டு ஊராட்சிகளையும் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட அருந்ததியர் சமூகத்தினர் குடும்பம் ஒன்றாக வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தனது பட்டா நிலத்தை மயானத்திற்கு தானமாக கொடுத்துள்ளார்.
அதில் அவர்கள் தங்களது உறவினர்களை அடக்கம் செய்து வந்த நிலையில் மதுரவல்லி கிராமத்தை சேர்ந்த கருப்புசாமி(54) என்பவர் உடல்நிலை குறைவால் இருந்து விட்டார். மயானத்தின் அருகே உள்ள ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அவரது உடலை அடக்கம் செய்யமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஊர் பொதுவில் உள்ள மயானத்தில் இன்று அடக்கம் செய்வதற்கான பணிகளை செய்துள்ளனர். ஆனால் அப்பகுதியை சேர்ந்த குறிப்பிட்ட சில சமூகத்தினர் பொது மயானத்தில் அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இறந்தவர் சடலத்தை புதைப்பதில் இரண்டு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட தகவல் அறிந்து வேப்பூர் போலீசார் அங்கு வந்தனர். வாக்குவாதம் அதிகரிக்கவே திட்டக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு பொதுமக்கள் இடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில் மயானத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தை மூடுவதற்காக ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள் ஜேசிபி இயந்திரத்தை மறித்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு நிலையில் தற்போது போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு வருகின்றனர்.