online scam a
தமிழ்நாடு

77 லட்சம் அபேஸ்.. ஆசை காட்டி அரங்கேறிய மெகா மோசடி! மக்களுக்கு கடும் எச்சரிக்கை!

ஆன்லைன் மூலம் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை காட்டி, பணத்தை முதலீடு செய்ய வைத்து மோசடி செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

PT WEB

பெரம்பலூர் அன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர், QNET பெயரை பயன்படுத்திய குழுவிடம் ரூ.77.60 லட்சம் முதலீடு செய்து ஏமாந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிக லாபம், பரிசுகள் என ஆசை காட்டி செயலி மூலம் பணம் செலுத்தச் செய்ததாக கூறப்படுகிறது. 5 ஆண்டுகளாக லாபமும், முதலீட்டும் திரும்பக் கிடைக்காத நிலையில், மூவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் - ராஜ்குமார்.ர

ஆன்லைன் மூலம் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை காட்டி, பணத்தை முதலீடு செய்ய வைத்து மோசடி செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் மோசடியில் சிக்கியதாக எழுந்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர், QNET நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி தங்களிடம் இருந்து ரூ.77.60 லட்சம் வரை பணம் பெற்று மோசடி செய்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

SCAM

பாதிக்கப்பட்டவர்கள் கூறியதன்படி, QNET நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்திய சிலர், அந்நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி நம்ப வைத்ததாகத் தெரிகிறது. மேலும், சம்பந்தப்பட்ட செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் பணத்தை முதலீடு செய்யுமாறும் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனை நம்பிய அன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பலர், குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரை பணத்தை முதலீடு செய்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒருவர் மூலம் மற்றொருவரை நிறுவனத்தில் இணைக்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. புதிதாக நபர்களை இணைத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறப்பட்டதாகவும், சிலருக்கு பரிசுப் பொருட்கள் அனுப்பப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், அதன் பின்னர் வாக்குறுதி அளிக்கப்பட்ட லாபத் தொகை கிடைக்கவில்லை என்றும், முதலீடு செய்த பணமும் திரும்பக் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சுமார் 5 ஆண்டுகளாக பணம் திரும்பக் கிடைக்காத நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் தாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கலாம் என்பது தெரியவந்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

online scam

இதையடுத்து, பாதிக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்டோர் ஒன்றாக காவல்துறையை அணுகியுள்ளனர். அவர்களின் புகாரின் அடிப்படையில், அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ், லட்சுமணன் மற்றும் அழகேசன் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் முக்கிய நபராகக் கூறப்படும் சுரேஷ் என்பவர் வெளிநாட்டில் இருப்பதாகவும், அவரிடம் விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையே, தங்களிடம் இருந்து பெறப்பட்ட பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்றும், இந்த மோசடியில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.