சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர்த்தேக்கங்களில் ஒன்றான புழல் ஏரி வறண்டு வருவதைக் கட்டும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியான நிலையில், அதை நியூயார்க் டைம்ஸ் நிறுவனம் செய்தியாக வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் போதிய பருவமழை பெய்யாததாலும், வாட்டிவதைக்கும் கோடையாலும் அனைத்து முக்கிய நீர் நிலைகளும் வற்றிவிட்டன. சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் உள்ளிட்ட ஏரிகளும் முற்றிலும் வறண்டு விட்டன. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. இந்நிலையில், அண்மையில் புழல் ஏரி வறண்டது குறித்து ஒரு செயற்கைக்கோள் படம் வெளியாகியது.
அதில் கடந்த ஆண்டு ஜூன் 15ஆம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படத்துடன், இந்த ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஒப்பிட்டு வறட்சி தெளிவாக காட்டப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு புழல் ஏரியில் 1393 மில்லியன் கன அடி நீர் இருந்த நிலையில், தற்போது 2 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது என்பதையும் அந்தப் புகைப்படங்கள் தெரிவிக்கின்றன. செம்பரம்பாக்கம் ஏரியும் வறண்டு போனதை குறிப்பிட்டு சென்னையில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு என நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.