புதிய தலைமுறை சக்தி விருதுகள் 2024
புதிய தலைமுறை சக்தி விருதுகள் 2024 pt web
தமிழ்நாடு

சாதனை பெண்களை கௌரவிக்கும் புதிய தலைமுறை சக்தி விருதுகள் - 2024

Angeshwar G

புதிய தலைமுறை சக்தி விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தாண்டிற்கான சக்தி விருதுகள் வழங்கும் விழா, கடந்த பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடந்தது. விழாவில் 6 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன. அத்துடன் விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர், திரைப்பட இயக்குநர் ஹலிதா ஷமீம், நடிகை சங்கராபரணம் ராஜ்யலட்சுமி, கவிஞர் வேல்கண்ணன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். விருதுகள் விவரம் கீழே...

திறமை

இவ்விழாவில் திறமைக்கான சக்தி விருது தமிழகத்தின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் எனும் சாதனையைப் படைத்த வைஷாலிக்கு வழங்கப்பட்டது.

துணிவு

துணிவுக்கான சக்தி விருது தீயணைப்புத்துறையில் நியமனம் செய்யப்பட்ட முதல் இந்திய ஆட்சியப் பணியாளர் பிரியா ரவிச்சந்திரனுக்கு வழங்கப்பட்டது. 2012-ஆம் ஆண்டு பொங்கல் விழாவின்போது சென்னை எழிலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தை தடுக்க கடுமையாக முயற்சி செய்து 45% தீக்காயங்களோடு பெரும் களமாடி தீயை அணைத்தார். சென்னை வெள்ளம், முகலிவாக்கம் இடிபாடுகள், மணப்பாறை குழந்தை மீட்பு என பேரிடர் பணிகள் என பல்வேறு மீட்புப் பணிகளில் அயராது செயல்பட்டவர்.

தலைமை

தலைமைக்கான சக்தி விருது இஸ்ரோ விஞ்ஞானி, ஆதித்யா எல்1 திட்ட இயக்குநரான நிகர் ஷாஜிக்கு வழங்கப்பட்டது. வேளாண் குடும்பத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் பயின்று இஸ்ரோ விஞ்ஞானியாக உயர்ந்துள்ளார்.

சாதனை

வாழ்நாள் சாதனையாளருக்கான சக்தி விருது, இயற்கை விவசாயியான பாப்பம்மாள் அவர்களுக்கு வழங்கப்பட்டது. சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த இவர் தனது தந்தை நடத்திய கடையைத் தொடர்ந்தாலும் வேளாண் செய்யும் கனவில் இருந்தார். சிறுக சிறுக சேர்த்த பணத்தில் இரண்டரை ஏக்கர் நிலம் வாங்கி விவசாயத்தில் ஈடுபட்டார்.

கருணை

கருணைக்கான சக்தி விருது, திருநங்கையர்/ திருநம்பிகள் ஆய்வு மற்றும் ஆவண மையம் அமைத்து மூன்றாம் பாலினத்தவர்களுக்காக குரல்கொடுத்து வரும் பிரியா பாபுவிற்கு வழங்கப்பட்டது. கொரோனா காலக்கட்டத்தில் திருநங்கையர் மட்டுமின்றி, தெருவோர வணிகர்கள், வெளிமாநில தொழிலாளர்கள், ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டோருக்கான உதவி மையத்தை தொடங்கி அவர்களை காத்து நின்றார்.

புலமை

புலமைக்கான சக்தி விருது உலக சுகாதார நிறுவனத்தின் மேனாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதனுக்கு வழங்கப்பட்டது. டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதனின் மகளான இவர் காசநோயை ஒழிக்க தொடர்ச்சியாக உழைக்கும் ஆய்வாளர்.

திரைப்பட இயக்குநர் ஹலிதா ஷமீம் கூறுகையில், “சக்தி விருதுகள் மிக முக்கியமான ஒன்று என நான் நினைக்கின்றேன். 4 வருடங்களுக்கு முன் திறமை எனும் பிரிவில் நானும் சக்தி விருதுகளை வாங்கியுள்ளேன். 6 பேரை ஊக்குவிப்பதற்காக இத்தனை பேர் வேலை செய்கிறார்களே, அது மிகப்பெரிய விஷயம்” எனத் தெரிவித்துள்ளார்.

கவிஞர் இளம்பிறை கூறுகையில், “பெண்களை ஊக்கப்படுத்தும், உற்சாகப்படுத்தும் அவர்களை பெருமை சேர்க்கும் விருதுகள் அவசியம். அது அவர்களது பணியையும் ஆற்றலையும் இன்னும் வேகப்படுத்தும், மேம்படுத்தும்” என்றார்.