தமிழ்நாடு

புதியதலைமுறை சார்பில் பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணன் குடும்பத்துக்கு ரூ.26 லட்சம் நிவாரணம்

PT

வடிகாலில் தவறிவிழுந்து உயிரிழந்த ஊழியர் முத்துக்கிருஷ்ணனின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக, புதிய தலைமுறை குழுமத்தின் சார்பில் அதன் நிறுவனத் தலைவர் டாக்டர் ஆர்.பி. சத்யநாராயணன், 26 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன், சென்னையில் புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவில் பணியாற்றி வந்தார். கடந்த அக்டோபர் மாதம், மழைநீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து அவர் உயிரிழந்தார். இந்நிலையில், புதிய தலைமுறை குழுமம் சார்பில் அதன் நிறுவனத் தலைவர் டாக்டர் ஆர்.பி. சத்யநாராயணன், மறைந்த முத்துக்கிருஷ்ணனின் பெற்றோர் வள்ளிமயில் - சங்கர் ஆகியோரிடம் 26 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

காசோலையை பெற்றுக் கொண்ட முத்துக்கிருஷ்ணனின் தாயார், புளியங்குடி அங்கன்வாடி மையத்தில் தனக்கு பணி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷிடம் மனு அளித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஏற்கனவே, முத்துக்கிருஷ்ணனின் குடும்பத்தினருக்கு
அரசு சார்பில் 5 லட்ச ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டிருக்கிறது.

முத்துக்கிருஷ்ணனின் தாயார் வள்ளிமயில் பேசும்போது, “எனக்கிருந்த ஒரே சொத்து என் மகன்தான். பீடி சுற்றிதான் என் மகனை படிக்க வைத்தேன். என் குடும்பத்தின் ஊன்றுகோல் என் மகன்தான். என் மகனுக்கு ரயில்வே துறையில் வேலை கிடைத்தது. கடற்படையிலும் என் மகனுக்கு வேலை கிடைத்தது. என் மகன் இருந்திருந்தால் குடும்பத்தின் நிலை நன்றாக இருந்திருக்கும். குழந்தைகளுடன் நேரம் செலவிடவே அங்கன்வாடியில் வேலை கேட்கிறேன். வேலை வழங்க முதலமைச்சர் உதவ வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.