தமிழகத்தில் பெட்ரோல், டீசல் அளவை முறைகேடாக குறைந்த அளவு விற்பனை செய்த 127 விற்பனை நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.
புதிய தலைமுறையின் புலன் விசாரணை நிகழ்ச்சியில் பெட்ரோல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பான ஆதாரங்கள் ஒளிபரப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து பெட்ரோல், டீசல் அளவை முறைகேடாக குறைந்த அளவு விற்பனை செய்த 127 விற்பனை நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தொழிலாளர் துறை வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், கடந்த 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 818 பெட்ரோல் விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் 127 விற்பனை நிலையங்களில் முறைகேடாக குறைந்த அளவு பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்தில் 34 நிறுவனங்கள், கோவை மண்டலத்தில் 24 நிறுவனங்கள், திருச்சி மண்டலத்தில் 30 நிறுவனங்கள் மதுரை மண்டலத்தில் 39 நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முறைகேட்டில் ஈடுபட்ட அந்த நிறுவனங்களில் விற்பனை தடை செய்யப்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் முறைகேடாக குறைந்த அளவு வழங்கப்படுவதாக சந்தேகம் இருந்தால் அந்தந்த நிறுவனங்களில் இருக்கும் 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட கூம்பிய அளவினைப் பயன்படுத்தி சரிபார்த்துக்கொள்ள வழி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான புகார்களை டி.என்-எல்.எம்.சி.டி.எஸ் என்ற செயலி மூலம் தெரிவிக்கலாம் என பொதுமக்களுக்கு தொழிலாளர் துறை அறிவுறுத்தியுள்ளது.