தமிழ்நாடு

பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணன் மரண விவகாரம்: அமைச்சர் ஏ.வ.வேலு பேட்டி

webteam

புதிய தலைமுறை உதவி ஆசிரியர் முத்துகிருஷ்ணன், மழைநீர் வடிகால் பகுதியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறை உடன் இணைந்து விசாரணை நடந்து வருவதாக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

சென்னையில் அம்பேத்கர் மணிமண்டபத்தில் நடந்து வரும் புனரமைப்பு பணிகள் மற்றும் காந்தி மண்டபம் அருகே கட்டப்பட்டு வரும் அயோத்திதாசர் மணிமண்டபப் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு பணிகளுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “மதுரவாயல் உயர்மட்ட சாலை திட்டம் மத்திய அரசு மேற்கொள்ளும் பணி. இந்த திட்டம் தொடர்பாக ஏற்கெனவே 3 முறை மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டது. சமீபத்தில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி இருக்கும் நிலையில், இதற்கான ஒப்பந்தம் மத்திய அரசு கோரி இருக்கிறது.

அதேபோல் மாநில அரசு இந்த திட்டத்திற்கான பணிகளுக்கு உதவி செய்வோம். நெடுஞ்சாலைத் துறை பணிகள் அனைத்து மாவட்டத்திலும் நடக்கிறது. சென்னையில் இரவு நேரத்தில் மட்டுமே செய்யும் நிலை இருக்கிறது. முக்கிய சாலையாக இருப்பதால் குறிப்பிட்ட நேரம் மட்டுமே செய்ய முடிகிறது. சென்ட்ரல் அருகே வால் டாக்ஸ் சாலையில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 95 சதவீதம் பணிகள் முடிந்துள்ளது. 3 நாட்களில் நெடுஞ்சாலை துறைப் பணிகள் சென்னையில் முழுமையாக முடிந்துவிடும். மேலும் பள்ளிக்கரணைப் பகுதியில் நெடுஞ்சாலையை ஒட்டி வீடுகள் இருப்பதால் சிரமமாக இருக்கிறது.

புதிய தலைமுறை செய்தியாளர் முத்துக்கிருஷ்ணன் இறந்தது மிகவும் வருத்தமான செய்தி. இந்த நிமிடம் வரை எந்த இடத்தில் உயிரிழந்தார் என அதிகாரிகள் உறுதி செய்ய முடியாத நிலை இருக்கிறது. இரவு நேரத்தில் நடந்து இருப்பதால் காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர். விபத்து நடந்த இரவு பொறியாளர் ஆய்வு செய்துள்ளார். எந்தத் துறை பொறுப்பு என்பதை மாறி மாறி பேச முடியாது. ஆனால் அரசுக்கு பொறுப்பு இருக்கிறது. விபத்து எந்த இடத்தில் நடந்தது? எப்படி நடந்தது என்று காவல்துறை உடன் இணைந்து விசாரணை நடக்கிறது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.