புயல் காலங்களில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்க துறைமுகங்களில் 11 வகையான புயல் கூண்டுகள் ஏற்றப்படுகின்றன. புயல் கூண்டுகளின் குறியீடுகள் குறித்து அறிந்து கொள்வோம்.
துறைமுகத்தில் இருந்து வெகு தூரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகும் பட்சத்தில் ஒன்றாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படும். இரண்டாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால் துறைமுகத்தில் இருந்து குறிப்பிட்ட தூரத்தில் புயல் உருவாகி மையம் கொண்டிருக்கிறது என்றும், துறைமுகத்தில் இருந்து வெளியேறும் கப்பல்கள் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும் என்றும் அர்த்தமாகும். துறைமுகப் பகுதியில் மோசமான வானிலை நிலவுவதோடு, காற்றின் வேகம் அதிகரிக்கும் போது மூன்றாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படும்.
நான்காம் எண் கூண்டு ஏற்றப்பட்டால் கடலில் மையம் கொண்டுள்ள புயல் அதிக பாதிப்பில்லாத புயலாக இருக்கும் என அர்த்தம். புயல் துறைமுகத்தின் வலதுபக்கத்தில் கரையை கடக்கும் என்பதால் கடுமையான வானிலை இருக்கும் என்பதை உணர்த்த 5-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், இடது பக்கத்தில் கரையை கடக்கும் என்பதால் கடுமையான வானிலை இருக்கும் என்பதை உணர்த்த 6-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்படுகிறது. ஏழாம் எண் எச்சரிக்கை கூண்டானது புயல் துறைமுகத்தின் மிக அருகே அல்லது துறைமுகம் இருக்கும் பகுதி வழியாகக் கரையைக் கடக்கும் என்பதை குறிப்பதாகும்.
மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய வலிமை நிறைந்த புயலானது துறைமுகத்தின் வலதுபக்கக் கரையைக் கடக்கும் என்பதற்கு எட்டாம் எண் எச்சரிக்கை கூண்டும், வலிமை நிறைந்த புயல் இடது பக்கக் கரையைக் கடக்கும் என்பதைக் குறிக்க ஒன்பதாம் எண் எச்சரிக்கைக் கூண்டும் ஏற்றப்படும்.
பத்தாம் எண் கூண்டானது, மிகக் கடுமையான புயல் தாக்கும் இதனால் பெரிய அபாயம் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.11ஆம் எண் எச்சரிக்கை கூண்டானது புயல் எச்சரிக்கை மையத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பதற்காக ஏற்றப்படும்.