மிடாஸ் மதுபான நிறுவனத்திலிருந்து டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானக் கொள்முதல் நிறுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சசிகலாவுக்கு சொந்தமான மிடாஸ் நிறுவனத்திடமிருந்து, தமிழகத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் 25 சதவிகிதம் மதுபானங்கள் வாங்கப்பட்டு வந்தன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் மிடாஸ் மதுபான ஆலையில் வருமானவரிச் சோதனை நடைபெற்ற நிலையில், அந்நிறுவனத்தின் கணக்குகள் தற்போது முடக்கி வைக்கப்பட்டுள்ளன.
பொதுவாக, டாஸ்மாக் கடைகளுக்கு மது ஆலைகளிலிருந்து, மதுபானங்கள் வாங்கப்படும்போதே ஆயத்தீர்வை கட்டியாக வேண்டும். இந்நிலையில், மிடாஸ் நிறுவனத்தின் கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டிருப்பதால், அந்நிறுவனம் ஆயத்தீர்வையைக் கட்டி மது விற்பனை செய்ய முடியவில்லை. எனவே, கடந்த 14 நாட்களாக மிடாஸ் நிறுவனத்திடமிருந்து டாஸ்மாக் கடைகளுக்கு மதுபான வகைகள் கொள்முதல் செய்யப்படவில்லை எனத் தெரிகிறது.