கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த தவெக பரப்புரை மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்கியிருக்கும் நிலையில், இன்று, ஈரோட்டில் தவெக தலைவர் விஜயின் பொதுக்கூட்டம் நடந்து வருகிறது. மேலும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்ததற்கு பிறகு, நடக்கும் முதல் பொதுக்கூட்டம் என்பதால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டுவந்தது.
இந்நிலையில், இந்தப் பொதுக்கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில், கொங்கு மண்டல அமைப்புச் செயலாளரும், தவெக நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன் பேசுகையில், "ஆட்சிக்கு வரவேண்டுமென்று பலபேர் கனவு காண்கிறார்கள் என்று பலரும் சொல்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டு மக்களைப் பொறுத்தவரை நாளை தமிழ்நாட்டை ஆளப்போவது புரட்சித்தளபதிதான். ஏழை எளிய மக்களின் கண்ணீர் தீர்க்கப்பட நல்ல தலைமை வேண்டுமென்ற பல நாள் மக்கள் கனவு இன்று நிறைவேறியிருக்கிறது. நம்முடைய கூட்டம் எதிர்கால தமிழகத்தை வடிவமைக்க பெருந்திரளாக திரண்டிருக்கின்றனர். உங்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வருவாய். அதை தேவையில்லை என்று விட்டு மக்களுக்காக பணியாற்ற வந்திருக்கிறார். இது தீர்ப்பளிக்கப்போகிற கூட்டம். நீங்கள் திரண்டு வந்தால் நாடு தாங்காது. எதிர்காலம் பிரகாசமுடையதாக மாறப்போகிறது" என்றார்.