தமிழ்நாடு

கலப்பு திருமணத்துக்கு எதிரானவர்கள் அல்ல: குற்றச்சாட்டை மறுக்கும் புன்னைக்காயல் மக்கள்

கலப்பு திருமணத்துக்கு எதிரானவர்கள் அல்ல: குற்றச்சாட்டை மறுக்கும் புன்னைக்காயல் மக்கள்

webteam

தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயல் கிராமத்தில் பனிரெண்டு குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாக எழுந்த புகாருக்கு அப்பகுதி மக்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது புன்னைக்காயல். இங்கு பனிரெண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன.  இந்த கிராமத்தில் கடந்த தினங்களுக்கு முன் ஊர்க்கமிட்டி மூலம் தண்டோரா அறிவிக்கப்பட்டது. அதில் குறிப்பிட்ட பனிரண்டு குடும்பங்களால் ஊருக்கு பங்கம் ஏற்படுவதாகக் கூறி அந்த குடும்பங்களை ஊரை விட்டு விலக்குவதாக அறிவித்தனர். அவர்களை ஊரைவிட்டு வெளியேறுமாறும் தெரிவித்தனர். 

அந்த பனிரண்டு குடும்பங்களில் ஒருவரான சபர்ஷா என்பவர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவரை கலப்புத்திருமணம் செய்துள்ளார்.   அவர் ஊர்க்கமிட்டிக்கு எதிராக ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தான் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவரை கலப்புத்திருமணம் செய்ததால் தங்களை ஊரை விட்டு வெளியேறுமாறு ஊர் நிர்வாகம் வற்புறுத்துவதாகவும் மேலும் காதலித்து கலப்புத்திருமணம் செய்த பதினைந்து குடும்பங்களையும் வெளியேறச் சொல்வதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். 
 
          
அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த புகார் குறித்தும் கிராமத்தில் கலப்புத்திருமணம் செய்தவர்களின் நிலை குறித்தும் புதிய தலைமுறை நேரடி கள ஆய்வு மேற்கொண்டது. இந்த புகார் குறித்து புன்னைக்காயல் மீனவ கிராமத்தின் ஊர்நலக்கமிட்டி தலைவரான செல்வராஜ் என்பவர் பேசும் போது இந்த மீனவ கிராமத்தினர் கலப்புத்திருமணத்திற்கு எதிரானவர்கள் அல்ல. இங்கே வசிக்கக் கூடிய அத்தனை சாதியினருமே காதல் கலப்புத்திருமணம் செய்திருப்பவர்கள்தான். அவர்களும் இன்றுவரை எங்கள் மீனவர்களோடு ஒன்றியே வாழ்ந்து வருகிறார்கள்.

மேலும் தாங்கள் ஊரைவிட்டு விலக்குவதாக அறிவித்த குடும்பங்களால், ஊரின் பாரம்பரியம் பாதிக்கப்படுவதால் விலக்குவதாக அறிவித்தோம் என்றார்.  மேலும் இந்த சபர்ஷா என்ற பெண் புன்னைக்காயல் கிராம ஊராட்சி மன்றத்தின் செயலராக இருந்தவர். அப்போது இவர் ஊழலில் ஈடுபட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும்  அவர் ஊழல் செய்த பணத்தை மீட்டுத்தரக்கோரியும் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் கொடுத்திருக்கிறோம் என்றார்.