அமமுக பட்டா இல்லாத புறம்போக்கு நிலம் போன்றது என புகழேந்தி விமர்சித்துள்ளார்.
புகழேந்தி முன்னிலையில் அமுமுக அதிருப்தி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிருப்தியாளர்கள் அனைவரும் அமுமுகவில் இருந்து விலகி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, “இரண்டாண்டு காலம் பட்டா இல்லாத புறம்போக்கு நிலமான அமமுக-வில் பயணித்தோம். தினகரனை ஆதரித்தமைக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்கிறோம். தற்போது வற்றாத ஜீவநதியோடு இணைய உள்ளோம். எடப்பாடி பழனிசாமி ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதை நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. பழனிசாமி என்ற நல்ல மனிதருக்கு இயற்கை உள்ளிட்ட அனைத்துமே சாதகமாக உள்ளது.
தினகரன் குறிப்பிட்ட ஸ்லீப்பர் செல் என்பதெல்லாம் பொய். ஆளுங்கட்சிக்கு ஸ்லீப்பர் செல்லாக செயல்பட்டவர் பழனியப்பன். மீண்டும் ஆளுங்கட்சிக்கான தனது வேலையை செய்துவிட்டு பழனியப்பன் அதிமுகவில் இணைவார். டிடிவி தினகரன் கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும், ஆட்சியையும் தொல்லை செய்ய நினைத்தால் எதிர்க்க நான் ஒருவன் போதும்.
சசிகலா சிறையிலிருந்து வெளிவருவதை டிடிவி தினகரன் விரும்பவில்லை. நிர்வாகிகள், தொண்டர்களின் அயராத உழைப்பே ஆர்கே நகர் இடைத்தேர்தல் வெற்றிக்கு காரணம். தினகரன் எப்போது அழைத்தாலும் நேரில் விவாதம் செய்யத் தயார்” எனத் தெரிவித்தார்.