தமிழ்நாடு

“யாரும் என்னை நீக்க முடியாது; அமமுக கட்சியே என்னுடையது” - புகழேந்தி  

“யாரும் என்னை நீக்க முடியாது; அமமுக கட்சியே என்னுடையது” - புகழேந்தி  

webteam

அமமுகவில் இருந்து யாரும் என்னை நீக்க முடியாது என புகழேந்தி தெரிவித்துள்ளார். 

கோவையில் தனியார் ஹோட்டல் ஒன்றில் கட்சியினருடன் புகழேந்தி பேசிய வீடியோ அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் ''இங்கு யாருடனும் இருக்கும் விருப்பம் எனக்கு இல்லை. டிடிவியை ஊர் ஊராகச் சென்று நான் தான் அடையாளப்படுத்தினேன். ஆனால் ஜெயலலிதா மரணத்தில் கூட அவர் உடன் இல்லை. இதனால் விரைவில் ஒரு நல்ல முடிவு எடுப்பேன்'' எனப் பேசியிருந்தார். இதனால் அவர் அமமுகவில் இருந்து வெளியேறலாம் என செய்திகள் கசிந்தன.

இதைத்தொடர்ந்து தற்போது அமமுக செய்தித் தொடர்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ ரெங்கசாமி, முன்னாள் எம்.எல்.ஏ வெற்றிவேல்,மற்றும் சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்ட 14 பேர் கொண்ட பெயர் பட்டியல் இடம்பெற்றுள்ளது. ஆனால் செய்தித் தொடர்பாளராக இருந்து வந்த புகழேந்தியின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் அமமுகவில் இருந்து அவர் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த புகழேந்தி, “நான் பாஜகவுக்கு செல்வதாக கூறுவது தவறு. இதுவரை நான் எந்தக் கட்சிக்கும் செல்லவில்லை. அமமுக செய்தி தொடர்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக எனக்கு தகவல் வரவில்லை. அமமுகவில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது; கட்சியே என்னுடையது. அமமுகவை ஆரம்பித்ததில் நானும் ஒருவன். யாரையும் நம்பி நான் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.