அழிந்து வரும் ஓவியக்கலைகளில் ஒன்றான தஞ்சாவூர் ஓவியக் கலையை மீட்டெடுத்து வரைந்து வருவது மட்டுமல்லாது, தங்கள் ஊரை சேர்ந்தவர்களுக்கு பயிற்சி அளித்தும் வருகிறார் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஓவியர் ஒருவர்...
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை சேர்ந்தவர் காத்தான். இவர் சிறு வயது முதலே ஓவியக்கலையில் ஆர்வம் கொண்டு 35 ஆண்டுகளுக்கும் மேலாக தஞ்சாவூர் ஓவியத்தை வரைந்து வருகிறார். தஞ்சாவூர் ஓவியத்தை வரைந்து விற்பனை செய்வது மட்டுமல்லாமல், இதை தங்கள் ஊரில் ஓவியத்தின் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு பயிற்சியும் அளித்து வருகிறார்.
இந்த தஞ்சாவூர் ஓவியங்கள் மராட்டிய மன்னர் சரபோஜி காலத்தில் பயன்படுத்தப்பட்டது. அதன் பிறகு காலப்போக்கில் அழிந்து வரும் கலைகளில் ஒன்றாக உள்ளது.
ஆனால், தற்போது இந்த ஓவியங்களை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு தகுந்தவாறு நேர்த்தியாகவும், அழகாகவும் வரைந்து, கண்ணைக் கவரும் ஓவியமாக தம் கண் முன்னே நிறுத்துகிறார் ஓவியக் கலைஞர் காத்தான். இதனை நேர்த்தியோடு செய்ய சிறிய ஓவியங்களுக்கு ஒரு மாத காலமும், பெரிய ஓவியங்களுக்கு இரண்டு முதல் மூன்று மாத காலம் வரை எடுத்துக்கொள்ளும் என்கின்றனர்.
இந்த ஓவியங்களுக்கு தங்க வண்ணம் பூசிய பேப்பர், கண்ணாடி கற்கள் வரை பயன்படுத்தப்பட்டாலும், இதில் பவள கற்கள், வைரக் கற்கள், தங்கத்தகடுகளையும் பயன்படுத்தலாம் என்றும் கூறுகின்றனர். தஞ்சாவூர் ஓவியக்கலை அழிந்து வரும் சூழலில், அதை மீட்டெடுத்து தன்னைச் சார்ந்தவர்களுக்கு கற்றுக் கொடுத்து வரும் காத்தானின் செயல் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.