புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே பெரிய கண்மாயில் நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று மீன் பிடித்து மகிழ்ந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே கட்டக்குடி கிராமத்தில் அமைந்துள்ள பிடாரி அம்மன் கோயில் முன்பாக உள்ள பெரிய கண்மாயில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் அதாவது பங்குனி மாதத்தில் மீன்பிடித் திருவிழா நடைபெறுவது அக்கிராம மக்களின் தொன்றுதொட்ட நடைமுறையாக உள்ளது. இவ்வாறு மீன்பிடித் திருவிழா நடத்துவதன் மூலம் அந்த கண்மாயில் உள்ள மீன்களை அனைவரும் சமத்துவத்துடனும் சகோதரத்துவத்துடனும் பிடித்து பகிர்ந்து கொள்ளலாம் என்பது அப்பகுதி கிராம மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
இந்நிலையில், கட்டக்குடி பெரிய கண்மாயில் தற்போது தண்ணீர் வற்றி உள்ள நிலையில் பாரம்பரியமிக்க மீன்பிடித் திருவிழா இன்று நடைபெற்றது. இதனையடுத்து அந்த கிராமத்தில் முக்கியஸ்தர்கள் அங்கு உள்ள பிடாரி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தபின் கொடியசைத்து மீன்பிடித்து விழாவை தொடங்கி வைத்தனர்.
இதில் கட்டக்குடி, மலைகுடிபட்டி, தென்னலூர், குரும்பம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு பெரிய கண்மாயில் இறங்கி தாங்கள் கொண்டுவந்திருந்த மீன்பிடி வலை, மற்றும் வேட்டி, சேலை உள்ளிட்டவற்றைக் கொண்டு அனைவரும் சமத்துவத்துடன் மீன் பிடித்து மகிழ்ந்தனர்.
இதேபோல் ஆண்டுதோறும் மீன்பிடித் திருவிழா நடத்துவதன் மூலம் இந்த ஆண்டு நல்ல மழை பெய்து நாடு செழிக்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.