புதுக்கோட்டையில் பயிர்காப்பீட்டு தொகை கிடைக்கவில்லை என குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். கூட்டத்தின்போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டு பயிர்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு, இதுவரையில் இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை என விவசாயிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விவசாயிகளை சமாதானப்படுத்திய ஆட்சியர் உமா மகேஸ்வரி, உடனடியாக சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்திடம் தொலைபேசியில் பேசினார்.
தீபாவளிக்கு முன்பாக விவசாயிகளுக்கு சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து, இழப்பீட்டு தொகையை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து விவசாயிகள் வாக்குவாதத்தை கைவிட்டனர். இதுகுறித்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூறுகையில், கடந்த ஆண்டு ஏற்பட்ட கடும் வறட்சியால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் கருகி விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளானதாக தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு காப்பீடு செலுத்தி இருந்தும் காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து இழப்பீடு தொகை கிடைக்கவில்லை என்றனர். சுமார் 18 ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தீபாவளி பண்டிகைக்கு முன்பாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை கிடைக்காவிட்டால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை என்றும் கூறினர்.