தமிழ்நாடு

புதுக்கோட்டை: தனியார் பேருந்துகள் 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்... அதிகாரிகள் ஆய்வு!

kaleelrahman

புதுக்கோட்டை மாவட்டத்தில் சில தனியார் பேருந்துகளில் 3 மடங்கிற்கும் அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக, புதுக்கோட்டையில் 15 சதவிகித பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால், மக்கள் தனியார் பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர். இதனை பயன்படுத்தி, சில தனியார் பேருந்துகள் 3 மடங்கு அதிகமாக பயணக் கட்டணம் வசூலிப்பதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு வர, வழக்கமாக 37 ரூபாய் வசூலித்து வந்த நிலையில், தற்போது நூறு ரூபாய் முதல் 150 ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். மேலும் கட்டணம் வசூலித்ததற்கான பயணச்சீட்டும் வழங்குவதில்லை என புகார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவ் ராஜ் உத்தரவின் பேரில் மோட்டார் வாகன ஆய்வாளர் சசிகுமார் தலைமையிலான அதிகாரிகள் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டை பேருந்து நிலையத்திற்குள் வரும் ஒவ்வொரு தனியார் பேருந்தாக  நிறுத்தி சோதனை செய்யும் போக்குவரத்து துறை அதிகாரிகள் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்து பயணிகளிடமும் நடத்துனர்களிடமும் பயணச் சீட்டை வாங்கி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.