புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள மண்ணவேளாம்பட்டியை சேர்ந்தவர் ராமராசு. இவரது மகன் ரிசிகேஸ் (6). அதேபோல், பழனிச்சாமி மகன் ரித்திக் (6), வீரப்பன் மகன் கருப்பசாமி (5), பரமசிவம் மகன் தனபிரியன்(5) இவர்கள் அனைவரும் நேற்று பள்ளி முடிந்து வந்து, ஒரே பகுதியில் விளையாடி உள்ளனர்.
அப்போது அப்பகுதியில் கிடந்த காருக்கு பயன்படுத்தக்கூடிய எலி கொல்லி ஸ்பேரேயை எடுத்து கையில் வைத்து விளையாடியதாக கூறப்படுகிறது. அப்போது சிறுவர்கள் மாறி மாறி முகத்திலும் ஸ்பிரேயை அடித்து கொண்டதாக கூறப்படுகிறது. ஸ்பிரேயின் நுரையும் அந்த சிறுவர்களின் வாயில் உள்ளே சென்றதாக கூறப்படுகிறது.
பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த சிறுவர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் உடனடியாக சிறுவர்களை மீட்டு அன்னவாசல் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவர்களை மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருந்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சிறுவர்களை மருத்துவர்கள் கண்காணித்து, சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஒரே பகுதியை சேர்ந்த இரண்டு ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் 2 எல்கேஜி மாணவர்கள் என 4 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், தொடர்ந்து சிறுவர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் எலி விஷம் என்பதால் மூன்று நாட்கள் அல்லது ஒரு வாரம் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் ஒருவேளை மாணவர்களின் வயிற்றுக்குள் எலி விஷம் சென்றிருந்தால் கல்லீரல் உள்ளிட்ட பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது எனவும் குழந்தைகளிடம் இது போன்ற விஷத்தன்மை உள்ள பொருட்களை கொடுக்காமல் அவர்களுக்கு கிடைக்காமலும் பெற்றோர்கள் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தனர்.