புதுக்கோட்டை திருமயத்தில் கனிமவளக் கொள்ளைக்கு எதிராக சட்டரீதியாகப் போராடிய சமூக ஆர்வலர் ஜகுபர் அலி டிப்பர் லாரி ஏற்றிப் படுகொலை செய்த சம்பவத்திற்குப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கனிமவளக் கொள்ளைக்கு எதிராக சட்டரீதியாகப் போராடி வந்த புதுக்கோட்டை திருமயம் அருகே உள்ள வெங்களூரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜகுபர் அலி, டிப்பர் லாரி ஏற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்டுவரும் மாஃபியாக்களின் கனிமவள சுரண்டலுக்கு எதிராகப் போராடியும், அதிகாரிகளிடம் ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும், நீதிமன்ற நடவடிக்கை மூலமாகவும் போராடிவந்தவர் சமூக ஆர்வலர் ஜகுபர் அலி ஆவார்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், காட்டுப்பாவா பள்ளிவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட மெய்யபுரம், துலையானூர், லெம்பலாக்குடி பகுதியில் மண்ணையும், மலைகளையும், அரசு அனுமதியின்றி புறம்போக்கு நிலங்களையும் ஆக்கிரமிப்பு செய்து, எம்.சாண்ட், ஜல்லி என அந்தப் பகுதி முழுவதையும் தொடர்ந்து சட்டவிரோதமாகப் பாழாக்கி வருகிறது கனிம மாஃபியா கும்பல். இந்த சட்டவிரோத கும்பல்களுக்கு, மறைமுகமாக காவல்துறையும் அரசு அதிகாரிகளும் முழுக்க உதவி செய்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.
கடந்தாண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இவர் தொடர்ந்த ஒரு வழக்கில், புதுக்கோட்டை மாவட்டம் முழுக்க உள்ள அனைத்து குவாரிகளும் இயங்கக் கூடாது என்ற ஒரு உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பித்து இருந்தது. தொடர்ந்து அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும், நீதிமன்றத்திற்கும் சென்று வழக்குப் போட்டும், கனிம வளங்களைப் பாதுகாக்கப் போராடி வந்தவர். இதனால் சட்ட விரோத கனிம மாஃபியா கும்பலுக்குத் தொடர்ந்து நெருக்கடியாக இருந்து வந்தார்.
இந்நிலையில், கனிம மாஃபியாக்கள் மீது விரிவான ஆதாரங்களுடன் கடந்த 10-01-2025 அன்று கோட்டாட்சியரிடம் இவர் புகார் கொடுத்த நிலையில், நேற்று மதியம் அவர் மசூதியிலிருந்து தொழுகை முடித்து வந்தபொழுது, அவர் வந்த இருசக்கர வாகனம் மீது, மணல், கற்கள் ஏற்றும் டிப்பர் லாரி ஒன்று வேகமாக வந்து மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் விபத்து இல்லை என்றும், திட்டமிட்ட படுகொலை என அவரது குடும்பத்தினரும், சட்ட விரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கத்தினரும் தெரிவிக்கின்றனர். எஸ்டிபிஐ கட்சியும் இது திட்டமிட்ட ஒரு படுகொலையாகவே கருதுகிறது.
கடந்த 2022 முதல் தமிழகத்தின் பல இடங்களில், சட்ட விரோத மணல், கல்குவாரி உள்ளிட்ட கனிமவளக் கொள்ளைகளுக்கு எதிராகவும், கனிம மாஃபியாக்களுக்கு எதிராகவும் சட்டரீதியாகப் போராடி வந்த சமூக ஆர்வலர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டும், தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டும் வரும் நிலையில், தற்போது புதுக்கோட்டை திருமயம் சமூக ஆர்வலர் ஜகுபர் அலி வாகனம் ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆகவே, புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை இதனை வெறும் விபத்தாகப் பதிவு செய்து வழக்கினை முடித்துவிடாமல், கொலை வழக்குப் பதிவு செய்து, முறையான விசாரணை நடத்தி, இவரது படுகொலைக்குக் காரணமான கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்டுவரும் மாஃபியா கும்பல் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதோடு, கனிம மாஃபியாக்கள் மீது நடவடிக்கை எடுத்து, கொள்ளையடித்துச் சேமித்து வைத்துள்ள கனிமத்தை அரசுடைமையாக்க வேண்டும்,
மேலும் கனிம மாஃபியாக்களுக்கு துணை போகும் அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். தவறும் பட்சத்தில் எஸ்டிபிஐ கட்சி கனிமவளக் கொள்ளைக்கு எதிராக ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து, மிகப்பெரும் அளவில் போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என அதில் தெரிவித்துள்ளார்.
"இந்த விஷயத்தில் சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும்” என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல், மண், மலை உள்ளிட்ட கனிமவளங்கள் சட்டவிரோதமாகக் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. பெயருக்கு ஒரு அரசு அனுமதியை வாங்கிக் கொண்டு ஒதுக்கப்பட்ட அளவைவிட பல ஆயிரம் மடங்கு கனிமங்கள் வெட்டி அள்ளப்படுவதைப் பல முறை ஆய்வுகளில் கண்டறியப்பட்டாலும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப்போக்குடன் செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக, விதியை மீறிய குவாரிகளுக்கு விதிக்கப்படும் அபராத தொகையைக் கூட கட்டாமல் கல்குவாரி அதிபர்கள் காலம் கடத்துவதை அதிகாரிகள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
இச்சூழலில், புதுக்கோட்டை மாவட்டம் வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்த தோழர் ஜகபர் அலி. சமூக ஆர்வலரான அவர், திருமயம் தாலுகாவில் தொடர்ந்து கனிம வள கொள்ளை நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ஆதாரங்களுடன் பல முறை மனு கொடுத்து வருகிறார். ஆனால், இவ்விவகாரம் குறித்து மாவட்ட நிர்வாகமும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப்போக்குடன் செயல்பட்டுள்ளது.
இதனையடுத்து, கடந்த 10.01.2025 அன்று, திருமயம் தாலுகாவில் கனிம வளக்கொள்கை நடப்பதாக, புதுக்கோட்டை கோட்டாட்சியரிடம், தோழர் ஜகபர் அலி மனு கொடுத்திருக்கிறார். அந்த மனுவில், சில குவாரிகளின் பெயர்களுடன், பல முக்கிய ஆதாரங்களையும் இணைத்து, கனிம வளக்கொள்ளை நடந்ததை அம்பலப்படுத்தி இருக்கிறார். இந்நிலையில், 17.01.2025 அன்று, தோழர் ஜகபர் அலி பள்ளிவாசலில் தொழுகையை முடித்து விட்டு, தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது, அவ்வழியாக வந்த கல்குவாரிக்கு சொந்தமான லாரி ஒன்று, ஜகபர் அலியின் வாகனத்தின் மீது மோதியிருக்கிறது. இதில், தோழர் ஜகபர் அலி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.
தோழர் ஜகபர் அலியின் மரணம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. அதாவது, கல்குவாரி அதிபர்களால் திட்டமிடப்பட்டு, இந்த விபத்து ஏற்படுத்தப்பட்டிருக்குமோ என்ற அச்சம் எழுகிறது. ஏனென்றால், தமிழ்நாட்டில் கனிம வளக்கொள்ளையை எதிர்த்த நேர்மையான அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமான நீதிமன்றத் தீர்ப்புகள் இருந்தாலும் சில அரசியல் கட்சியினரின் முழு ஆதரவோடு கொள்ளை நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, தோழர் ஜகபர் அலியும் திட்டமிட்டு கல்குவாரி அதிபர்களால் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் இதில் அரசு அதிகாரிகள் பலரும் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சந்தேகிக்கிறது.
எனவே, தோழர் ஜகபர் அலி மரண விவகாரத்தை விசாரிக்க, இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும். மேலும், தமிழ்நாட்டில் மணல், கற்கள் உள்ளிட்ட கனிமவள கொள்ளையை தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. தோழர் ஜகபர் அலியின் குடும்பத்தினருக்கு ரூ.25 இலட்சம் இழப்பீடும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தோழர் ஜகபர் அலியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, உறவினர்களுக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜகுபர் அலி படுகொலை குறித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் மற்றும் சட்ட விரோத கல் குவாரி எதிர்ப்பு இயக்கம் ஆகியனவும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதில், ‘புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், துலையானூர் கிராமத்தில் ஆர்ஆர் குரூப் நிறுவனம் (ஏற்கனவே சட்ட விரோத கனிமம் எடுத்ததற்காக 25 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனம்) உள்ளது.
இந்த நிறுவனங்களின் கல்குவாரி அனுமதி முடிந்த நிலையில், அனுமதி இல்லாத பாறைகளில் இருந்து 70,000 டிப்பர் லாரி லோடு (7 லட்சம் கன மீட்டர்- சுமார் 35 கோடி ருபாய் மதிப்பிலான) கற்களை, சட்டவிரோதமாக வெடி மருந்துகளை கடத்திக் கொண்டு வந்து பயன்படுத்தி வெடிவைத்து, கிரசர் மற்றும் எம் சாண்ட் ஆலைகளில் ஸ்டாக் வைத்திருப்பதை ஆதாரத்துடன் சமூக செயல்பாட்டாளர் ஜகுபர் அலி வட்டக் கண்காணிப்புக்குழு கன்வினர் மற்றும் திருமயம் வட்டாட்சியர், புதுக்கோட்டை கோட்டாட்சியர் ஆகியோரிடம் தொடர்ந்து மனு கொடுத்து வந்தார்.
எந்த அதிகாரியும் 15 நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்காததால், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் கடந்த 13-01-2025 திங்கள் கிழமை அன்று ஆதாரத்துடன் நேரில் புகார் மனு கொடுத்து உள்ளார். புகார் மனு கொடுத்துவிட்டு, அவர் செய்தியாளிடம் கொடுத்த பேட்டி காணொளி இத்துடன் இணைத்து கொடுக்கப்பட்டு உள்ளது.
மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு கொடுத்த நான்கு நாட்களில், 17-01-2025 அன்று, (கரூர் குப்பம் விவசாயி ஜெகநாதன், சட்ட விரோத கல்குவாரியை மூடிய மூன்று நாட்களில் 10-09-2022ல் படுகொலை செய்யப்பட்டது போல்) டிப்பர் லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.
தாய்மண் காக்க, சட்டப்படி செயல்படுபவர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பதே தமிழகத்தின் பேரவலம்!
சமூக சொத்தை (அரசு சொத்தை) பாதுகாத்த, சட்டவிரோத கல்குவாரி எதிர்ப்பு செயல்பாட்டாளர் ஜகுபர் அலி படுகொலை!
கடந்த சில மாதம் முன்பு, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் கோட்டாட்சியர் அவர்கள், சட்ட விரோத கனிம கொள்ளையில் ஈடுபட்ட வாகனத்தை பிடித்த பொழுது அவரது காரின் மீது வாகனத்தை ஏற்றி அவரை கொல்ல முயற்சித்தனர் என்பது வரலாறு! நேற்று இலுப்பூர் கோட்டாட்சியர், இன்று சமூக செயல்பாட்டாளர் ஜகுபர் அலி! சட்ட அமைச்சர் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில், சட்டம் ஒழுங்கு எங்கே? சட்டத்தின் ஆட்சி எங்கே??
சட்டவிரோத கல்குவாரி எதிர்ப்பு செயல்பாட்டாளர் ஜகுபர் அலி படுகொலைக்கு காரணமானவர்களை அனைவரையும் கைது செய்து, குண்டர் சட்டத்தில் சிறையில் அடை!! புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் தொல்லியல் சின்னங்களை அழித்தும் - சேதப்படுத்தியும் நடக்கும், அனைத்து சட்ட விரோத கனிமக் கொள்ளையை தடுத்து நிறுத்து. புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டாட்சியர் (RDO) போன்றவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில், மண் காக்க செயல்படும் சமூக செயல்பாட்டாளர்கள் உயிருக்கு பாதுகாப்பாக அரசே துப்பாக்கி வழங்கு!! மண் காக்கும் போராளி ஈகி ஜகுபர் அலி படுகொலைக்கு நீதி கேட்டு அனைவரும் குரல் கொடுப்போம்” எனத் தெரிவித்துள்ளது.