செய்தியாளர்: சுப.முத்துப்பழம்பதி
புதுக்கோட்டையில் சாந்தநாத புரத்தைச் சேர்ந்த விக்னேஷ்வரன் என்ற இளைஞரும் மேலும் 13 பேரும் போதை மாத்திரைகளையும் ஊசிகளையும் செலுத்திக் கொண்டதாக புதுக்கோட்டை காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்களை காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது காவல் நிலையத்தில் இருந்த விக்னேஸ்வரனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும், அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது அவர் உயிரிழந்துவிட்டதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில் விக்னேஸ்வரனை விசாரணைக்கு அழைத்துச் சென்றபோதுதான் உயிரிழந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். இதையடுத்து இந்த சம்பவத்தை காவல் நிலைய மரணம் என குறிப்பிட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே விக்னேஷ்வரனின் உடலில் காயங்கள் எதுவும் உள்ளதா என குற்றவியல் நீதிமன்ற நீதிபதி நேரிடையாகவும் எக்ஸ்ரே மூலமும் ஆய்வு செய்தார். பின்னர் உடற் கூராய்வு நடைபெற்ற நிலையில் உயிரிழந்த விக்னேஷ்வரனின் உறவினர்கள் ஐந்து பேரிடமும் சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளிடமும் நீதிபதி விசாரணை நடத்தி தனித்தனியாக வாக்குமூலம் பெற்றார்.
வாக்கு மூலங்களின் அடிப்படையிலும் பிரேத பரிசோதனையின் முடிவுகளின் அடிப்படையிலும் இந்த வழக்கின் அடுத்த கட்டம் இருக்கும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை பொறுத்த வரையில், “விக்னேஷ்வரனுக்கு ஏற்கெனவே மஞ்சள் காமாலை, சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு உள்ளிட்டவை இருந்துள்ளது. அவர் போதை மாத்திரைக்கு அடிமையாகியும் இருக்கிறார். இதனால் அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு போதை தடுப்பு மறுவாழ்வு சிகிச்சை மையத்தில் அவரது உறவினர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்” என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.