செய்தியாளர்: சுப.முத்துப்பழம்பதி
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள சேந்தன்குடி கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் 70வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு பல்வேறு சாதனையாளர்களையும், உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களையும் உருவாக்கிய பள்ளியை கௌரவிக்கும் விதமாக பள்ளிக்கு கிராம மக்களின் சார்பில் கல்விச் சீர்வரிசை கொண்டு வந்து அசத்தினர்.
ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே ஒன்று திரண்ட மக்கள் அங்கிருந்து மேசைகள், பெஞ்ச்கள், விளையாட்டுப் பொருட்கள், நாற்காலிகள், குப்பைத் தொட்டிகள், மின்விசிறிகள், இசைக் கருவிகள், கல்வி நூல்கள் என பள்ளிக்குத் தேவையான பல்வேறு பொருட்களை தலையில் சுமந்தபடி மேளதாளங்கள் முழங்க அதிர்வேட்டுகளோடு கிராமமே அசந்து போகும் அளவிற்கு கல்விச் சீர் கொண்டு பள்ளிக்கு வந்தனர்.
சீர்வரிசை கொண்டு வந்த கிராம மக்களை பள்ளி ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர். இதனையடுத்து நடைபெற்ற ஆண்டு விழாவில் பள்ளியின் வளர்ச்சிக்கு உதவியோர்கள் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், முன்னாள் மாணவர்களுக்கு நினைவு கேடயங்களும் வழங்கி கிராம மக்கள் கௌரவித்தனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.