ஆனி மஞ்சன தேரோட்டம் pt desk
தமிழ்நாடு

புதுக்கோட்டை | ஆத்மநாதர் சுவாமி கோயில் ஆனி மஞ்சன தேரோட்டம் - திரளான சிவபக்தர்கள் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆவுடையார்கோவில் ஆத்மநாதர் சுவாமி கோயிலில் ஆனி மஞ்சன தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான சிவனடியார்களும் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

PT WEB

செய்தியாளர்: சுப.முத்துப்பழம்பதி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆவுடையார்கோவிலில் திருவாடுதுறை ஆதினத்திற்குச் சொந்தமான ஆத்மநாதர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. மாணிக்கவாசகரால் பாடப்பட்டு புகழ் பெற்ற இக்கோயிலில் ஆனித் திருமஞ்சன தேரோட்டம் மற்றும் மார்கழி திருவாதிரை தேரோட்டம் என ஆண்டுக்கு இருமுறை மாணிக்கவாசகருக்கான தேரோட்ட திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான ஆனித் மஞ்சன திருவிழா கடந்த பத்து நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து நாள்தோறும் சுவாமி வீதி உலா காட்சிகளும் சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜைகளும் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று விழாவில் முக்கிய நிகழ்வான ஆனி மஞ்சன தேரோட்ட திருவிழா நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் மாணிக்கவாசகர் வீற்றிருக்க,சிவனடியார்களும் சிவாச்சாரியார்களும் தேவாரம் திருவாசகம் உள்ளிட்ட திருமந்திரங்களை பாட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்தனர். கோயிலைச் சுற்றி நான்கு வீதிகளிலும் ஆடி அசைந்து பவனி வந்த தேரை கரகோசங்களோடு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.