தமிழ்நாடு

புதுச்சேரிக்கு உடனடியாக ரூ.187 கோடி நிதி வேண்டும் !

webteam

கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுச்சேரிக்கு முதற்கட்டமாக 187 கோடி ரூபாய் நிதி அளிக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி மத்திய ஆய்வுக் குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கஜா புயலின் கோரதாண்டவத்தை அடுத்து புயல் பாதிப்பு குறித்து மத்திய குழுவினர் புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் தங்களது ஆய்வை தொடங்கினர். பின்னர்  ‌நாகை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன்,‌ எஸ்.பி.உதயகுமார், மாவட்‌ட ஆட்சியர் சுரேஷ்குமார், வேளாண்மைத்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி உள்ளிட்டோருடன் ஆய்வுக்கூட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மத்தியக்குழு நாகை மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் பகுதியில் ஆய்வு நடத்தினர்

அதன் தொடர்ச்சியாக மத்தியக் குழுவினர், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியுடன் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினர். புதுச்சேரி தலைமைச் செயலாளர் மற்றும் மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். புயலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மாநில அரசால் இதுவரை வழங்கப்பட்டுள்ள நிவாரணம் பற்றிய அறிக்கையை அப்போது மத்திய குழுவிடம் அளித்தனர். 

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளுக்காக முதற்கட்டமாக 187 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கோரிக்கை மனுவை அளித்தார். ஆலோசனைக்கு பின் பேட்டி அளித்த டேனியல் ரிச்சர்ட் , புதுச்சேரி அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாகக் கூறினார்