நடுநிலை இதழியலுக்கு மக்களிடையே பெயர்பெற்ற புதிய தலைமுறை தொலைக்காட்சி, அரசு கேபிளில் கடந்த வாரம் முதல் தெரியாதது குறித்து பொதுமக்கள் கேள்விகளை முன்வைக்கின்றனர். இதுதொடர்பாக அதிகாரிகள் உரிய பதிலைத் தராததால், அரசு கேபிள் நிறுவனத்திலிருந்து புதிய தலைமுறை நீக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துவருகிறது.
தமிழ்நாட்டின் அரசு கேபிள் நிறுவன இணைப்புகள் உள்ள பல்வேறு ஊர்களிலும் புதிய தலைமுறை சேனல் தெரியவில்லை எனும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும், அரசு கேபிள் நிறுவனத்திலிருந்து புதிய தலைமுறை சேனல் பரவலாக நீக்கப்பட்டுள்ளதா எனும் கேள்வியை இது எழுப்புகிறது.
சென்ற வெள்ளிக்கிழமை முதலாகவே பல்வேறு ஊர்களிலிருந்தும், ‘புதிய தலைமுறை’ அலுவலகத்துக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. அரசு கேபிள் நிறுவனத்தின் கீழ் கேபிள் இணைப்பைப் பெற்றிருப்பவர்களுக்கு வழக்கமாக 44 எனும் எண்ணில் புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிபரப்பாகும். ஆனால், இப்போது காட்சியே தெரியவில்லை எனும் புகாரை பார்வையாளர்கள் பலரும் கூறினர். அடுத்து சனி, ஞாயிறு, திங்கள் மூன்று நாட்களிலும் அரசு கேபிள் சார்ந்த அதிகாரிகளை புதிய தலைமுறை நிறுவனத்தின் சார்பில் தொடர்புகொண்டு இதுகுறித்த புகார்களை பகிர்ந்துகொண்டபோதும் அவர்களால் தெளிவான பதிலை கூற முடியவில்லை. ஆயினும், புதிய தலைமுறை அரசு அதிகாரிகளின் பதிலுக்காக காத்திருந்தது
நான்கு நாட்கள் வரை காத்திருந்தும் பதில் ஏதும் கிடைக்காத சூழலிலேயே அரசு கேபிள் நிறுவனத்தின் கணிசமான இணைப்புகளிலிருந்து புதிய தலைமுறை நீக்கப்பட்டிருக்கலாம் எனும் ஐயம் எழுகிறது. மக்களுக்கு கேபிள் சேவையை வழங்கும் நிறுவனம் எதுவாயினும், எல்லா தொலைக்காட்சிகளும் மக்களைச் சென்றடைய பாலமாகச் செயல்படுவதே கேபிள் சேவைக்கான நெறியாகும். இத்தகு பின்னணியில் புதிய தலைமுறை சேவை முடக்கப்பட்ட பின்னணி என்ன என்ற கேள்வி எழுகிறது.
தமிழ்நாட்டில் நடுநிலையான இதழியலுக்குப் பெயர் பெற்ற தொலைக்காட்சி என்பதோடு, எப்போதுமே மக்களுடைய எண்ணங்களை பிரதிபலிக்கும் தொலைக்காட்சியாகவும், பெருவாரி மக்களால் பார்க்கப்படும் முன்னணி தொலைக்காட்சியாகவும் திகழ்வது புதிய தலைமுறை. இப்படிப்பட்ட சூழலில், புதிய தலைமுறையின் சேவை நிறுத்தப்பட்ட காரணம் என்ன என்ற கேள்வியைப் பலரும் எழுப்பிவருகின்றனர்.