சீனாவில் இருந்து திரும்பிய புதுக்கோட்டையைச் சேர்ந்த நபர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர் சக்திகுமார். இவர் கடந்த 4-ஆம் தேதி சீனாவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார். இந்நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், கடந்த 14-ஆம் தேதி உயிரிழந்தார். அவருக்கு நுரையீரல் பாதிப்பு மற்றும் மஞ்சள் காமாலை இருந்ததாக கூறப்படுகிறது.
சக்திகுமார் இறந்தது குறித்து சுகாதாரத்துறையிடம் புதிய தலைமுறை கேட்டபோதுதான் சக்திகுமார் சீனாவில் இருந்து திரும்பியவர் என்பதே அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. சீனாவில் இருந்து திரும்பியவர்களை கண்காணித்து வருவதாக கூறும் நபர்களின் பட்டியலில் சக்திகுமார் பெயர் இடம்பெறவில்லை. இந்த சூழலில் சக்திகுமார் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் இருந்து வருபவர்களை தொடர் கண்காணிப்பில் வைத்திருந்து 14 நாட்களுக்குப் பிறகே அவரை வெளியே செல்ல அனுமதிப்பதாக அதிகாரிகள் தொடர்ச்சியாக சொல்லி வரும் நிலையில் இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது