தமிழ்நாடு

சூரியனில் 'ஓம்' என்ற ஒலியா? - கிரண்பேடியை கேள்விகளால் துளைத்த நெட்டிசன்ஸ்!

webteam

புதுச்சேரியின் ஆளுநராக 2016-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருபவர் கிரண்பேடி. அவர் பதவியேற்ற நாள் முதல் புதுச்சேரி மாநில அரசுக்கும், அவருக்கும் இடையே கருத்து மோதல்கள் நிலவி வருகின்றன. சமீபத்தில் புதுச்சேரியில் கேசினோ மற்றும் லாட்டரி கொண்டுவருவது குறித்து முதலமைச்சர் நாராயணசாமிக்கும் கிரண்பேடிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

ட்விட்டர் பக்கத்தில் ஆக்டீவாக இருக்கும் ஆளுநர் கிரண்பேடி சில பதிவுகள் மூலம் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதும் உண்டு. அப்படி ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்து நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார் கிரண்பேடி. 'NASA Recorded Sound of Sun' 'SUN CHANTS OM' என்ற வீடியோவை எந்த தலைப்பும் இடாமல் கிரண்பேடி பகிர்ந்துள்ளார்.

சூரியன் புகைப்படத்துடன் தொடங்கும் அந்த வீடியோ ஓம் என்ற இந்தி வார்த்தை, சிவன் படம் என மாறி மாறி வருகிறது. பின்னணியில் ஓம் என்ற ஒலியும் கேட்கிறது. இந்த வீடியோவுக்கு பதில் அளித்துள்ள பலரும் ஆளுநர் கிரண்பேடியை கிண்டல் செய்துள்ளனர்.

2018ம் ஆண்டு ஜூலையில் நாசா பகிர்ந்த உண்மையான வீடியோவை பகிர்ந்த சிலர், இது தான் உண்மையான வீடியோ என தெரிவித்துள்ளனர். அந்த வீடியோவில் சூரியனின் அதிர்வு ஒலி மட்டுமே பதிவாகியுள்ளது. உண்மைத்தன்மையை ஆராயாமல் வீடியோவை கிரண்பேடி பகிர்ந்துள்ளதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.