பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் திட்டத்தை பலப்படுத்தவே சில திருத்தங்கள் செய்யப்பட்டு கெசட்டில் வெளியிடப்பட்டுள்ளது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நாளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். இதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகளை தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆய்வு செய்தார் ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் ஆனந்த் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியதாவது..
இந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைபாடு. இதுதொடர்பாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதுதொடர்பான பதில் வந்த பிறகு நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.
டெல்டா மாவட்ட மக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு விடை கொடுத்தவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் திட்டத்தை பலப்படுத்தும் விதமாகவும் வளர்ச்சிப்படுத்தவும் சில திருத்தங்கள் செய்யப்பட்டு நேற்றைய தினம் கெசட்டில் வெளியிடப்பட்டுள்ளது" என்றார்.