ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டில் அதிகபட்சமாக 300 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசின் தலைமைச் செயலர் சண்முகம் வெளியிட்டார். அதில், “ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள வேண்டும். எருதுவிடும் நிகழ்ச்சியில், 150 வீரர்களுக்கு மிகாமல் பங்கேற்க வேண்டும். போட்டிகளை காண 50 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். வெப்ப பரிசோதனை செய்த பிறகே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.
போட்டியில் பங்கேற்கும் மாடுபிடிவீரர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்று கட்டாயம். முகக்கவசம், தனிமனித இடைவெளி போன்றவை கடைபிடிப்பது கட்டாயம். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளையுடன், அதன் உரிமையாளர் மற்றும் ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம்.
நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 7 நாள்களுக்கு முன்பே வீரர்கள் முன்பதிவு செய்து அடையாள அட்டையைப் பெற வேண்டும். கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுபவர்கள் உடனடியாக அரங்கில் இருந்து வெளியேற்றப்படுவர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.