திருவாரூர் அருகே சுடுகாட்டு சாலையை சீரமைக்காததால், சேறும் சகதியுமாக உள்ள சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
திருவாரூர் மாவட்டம் ஓகைப்பேரையூர் ஊராட்சியில் அமைந்துள்ளது நாகராஜன் கோட்டகம். 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த ஊரில், சுடுகாட்டுக்குச் செல்லும் சாலை சேறும் சகதியுமாக இருப்பதால் சாலையை உடனடியாக சீரமைக்கக் கோரி பொதுமக்கள், சாலையில் நாற்று நட்டு போராட்டம் நடத்தினர்.
கப்பி சாலையாக இருந்த இந்த சாலையில் ஏற்கெனவே பொதுப்பணித் துறையினர் ஆற்றில் தூர்வாரும் போது கிடைத்த மண்ணை, அந்த சாலையில் போட்டதால் அந்த சாலை முழுவதும் கடந்த 5 ஆண்டுகளாக சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால், இறந்தவர்களின் உடலை தூக்கிச் செல்ல மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.
ஓகைபேரையூரில் இருந்து சுபத்ரியம் வரை செல்லும் முக்கிய சாலையாக இது உள்ளது. அதேபோல், இந்த மோசமான சாலை வழியாகத்தான் புள்ளமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மாணவர்கள் சென்று வருகிறார்கள். இதனால் பொதுப்பணித் துறையினர் உடனடியாக சாலையை சீரமைத்துத் தருமாறு பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.