தமிழ்நாடு

திருவாரூர்: குண்டும், குழியுமான நெடுஞ்சாலைகள்.. பள்ளத்தை மறைக்க அதிகாரிகள் செய்த செயல்!

நிவேதா ஜெகராஜா

திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் குண்டும் குழியுமாக உள்ள இடத்தில் வீடுகளை இடித்த கம்பியும் களிமண்ணும் கலந்த மண்ணை கொண்டு நிரப்பியதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் திருவாரூர் - நாகை தேசிய நெடுஞ்சாலையில் அடியக்கமங்கலம் ONGC அருகில் சாலையின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் மேற்பகுதியில் பெரும் பள்ளம் ஏற்பட்டு அடிக்கடி விபத்து நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் கூட, அந்த பள்ளத்தால் ஒரு விபத்து ஏற்பட்டிருந்தது. விபத்துக்குள்ளான நபரை, அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு அந்த பகுதி மக்கள் அனுப்பி வைத்துள்ளார்கள். இதுகுறித்து பலமுறை நெடுஞ்சாலைத்துறையிடம் சொல்லியும் நெடுஞ்சாலைத்துறை அலட்சியமாக இருந்துள்ளது. இந்நிலையில், அடியக்கமங்கலம் பொதுமக்கள் சார்பாக சாலை மறியல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த மறியல் வருகிற மூன்றாம் தேதி நடைபெறும் என்று நெடுஞ்சாலைத் துறைக்கு துறை அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்களால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதனால் நெடுஞ்சாலை துறையினர் நேற்று இரவு அவசர அவசரமாக பள்ளம் உள்ள இடத்தில் வீடுகள் - கட்டிடங்களில் இடிக்கப்பட்ட கம்பி களிமண் கலந்த மண்ணை அங்கு கொட்டி சீர் செய்ய முயன்றுள்ளனர். இதன்மூலம் பிரச்னையை சரிசெய்துவிட்டதாக காண்பிக்க முயன்றிருக்கிறார்கள் நெடுஞ்சாலை துறையினர் என சொல்லப்படுகிறது. இத்தகவல் அறிந்து அப்பகுதி மக்கள் தகவலறிந்து அங்கு விரைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்த தகவலையறிந்த காவல்துறையினர் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையின் முடிவில் வீடு , கட்டடம் இடிக்கப்பட்டு அதிலிருந்து எடுக்கப்பட்ட கம்பி களிமண் கலந்த மண்ணை உடனடியாக அகற்ற வேண்டும்; மேலும் சாலை முறையாக செப்பனிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தார்கள்.

கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக அந்த மண்ணை அகற்றி விட்டார்கள். விரைவில் சரி செய்யப்படும் என வாக்குறுதி தந்தார்கள் அதன்பிறகு சாலை மறியல் கைவிடப்பட்டது