தமிழ்நாடு

”ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க முயற்சிக்கிறார்கள்” - போராட்டத்தில் எதிர்ப்பாளர்கள்!

Sinekadhara

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க முயற்சிப்பதாகக் கூறி எதிர்ப்பாளர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும், இன்றுவரை பணியாளர்கள் உள்ளே சென்று வருவதாகவும், ஆலையை மீண்டும் திறக்க முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் திடீர் போராட்டம் நடத்தினர். அதன் ஓருங்கிணைப்பாளர் அரிராகவன் தலைமையில் 200க்கும் மேற்ப்பட்டோர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், "கடந்த 1996ஆம் ஆண்டிலிருந்து செயல்படும் ஸ்டெர்லைட் ஆலையினால் தூத்துக்குடியின் நீர், நிலம், காற்று மிகவும் மாசுபட்டது. பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளினால் உயிர்க்கொல்லி நோய்களின் தாக்குதலுக்கு ஆளானார்கள்.

மக்கள் போராட்டம் எதிரொலியாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்து 2018ஆம் ஆண்டு ஆலைக்கு சீல் வைத்து பூட்டியது. ஆலைக்கு உள்ளேயுள்ள கழிவுகளையும், வேதிப் பொருட்களையும் அகற்றுவதற்கு உயர்மட்ட கமிட்டி ஆலைக்குள் ஆய்வுசெய்து கழிவுகளை அகற்றும் பணியை 90 நாட்களுக்குள் முடிக்கவும், 250 நபர்கள் ஆலைக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக மேற்கண்ட பணியாளர்கள், நிறுவன ஊழியர்கள், ஆலை அதிகாரிகள், ஸ்டெர்லைட் ஆலைக்குள் செல்கின்றனர். ஆலை மூடப்பட்டு 4 ஆண்டுகளாகியும் ஆலையினுள் தற்போது வரை பணியாளர்கள் சென்று வருவதற்கு எவ்வித உரிய அனுமதியும் இல்லை என்பது ஆர்டிஐ மூலம் தெளிவாகத் தெரிகிறது. ஆலையை மீண்டும் இயக்குவதற்கான அனைத்து பணிகளும் மேற்கொள்வதற்காகத்தான் தினமும் நூற்றுக்கணக்கானோர் ஆலையினுள் செல்கிறார்கள் என்ற எண்ணத்தையும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

2018இல் கொடுத்த அனுமதியை வைத்துக்கொண்டு தற்போது வரை பணியாளர்கள் ஸ்டெர்லைட் நிறுவனம் பணியை மேற்கொள்வது சட்ட விரோதம். இதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் முதல் அனைவரும் உடந்தையாக உள்ளனர். அரசு அதிகாரிகள், ஸ்டெர்லைட் நிறுவனத்தோடு நயவஞ்சக கூட்டு சேர்ந்து இச்சட்ட விரோத செயலுக்கு உடந்தையாக இருக்கின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். போராட்டம் நடத்திய மக்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், கூடுதல் கண்காணிப்பாளர் கோபி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவாகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர். ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் போராட்டத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது.