தமிழ்நாடு

பொதுமக்கள் கடும் எதிர்ப்பு: ஆனைமலை வனப்பகுதியில் விடப்பட்ட மக்னா யானை

webteam

மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட மக்னா யானையை எங்கே விடுவிப்பது என்பதில் சிக்கல் நீடித்ததால் யானைக்கு மீண்டும் மயக்க ஊசி செலுத்தி ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டது.

தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைகளில் நாற்பது வயது மதிக்கத்தக்க மக்னா என்ற வகையைச் சேர்ந்த தந்தம் இல்லாத ஆண் காட்டு யானை காட்டினுள் செல்லாமல் அதிகளவில் விவசாய பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வந்தது. இதையடுத்து, கும்கி யானைகளின் உதவியுடன் வனத்துறையினர் மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் இந்த யானையை கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்துள்ள டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்டது.

கடந்த பத்து நாட்களாக வனப்பகுதியில் சுற்றித் திரிந்த மக்னா யானை மீண்டும் காட்டை விட்டு வெளியேறி சுமார் 140 கிலோமீட்டர் வரை பயணித்து கோவையின் நகர பகுதிகளான குனியமுத்தூர், மதுக்கரை, பேரூர் என உலா வரத் துவங்கியது. பட்டப்பகலில் குடியிருப்பு பகுதிகள் வழியே நடமாடிய யானையை கண்டு மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். விவசாய பயிர்களை தேடி பேரூர் பகுதியில் சுற்றி வந்த யானையை வனத் துறையினர் மீண்டும் கும்கி யானைகளின் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

இதையடுத்து அரை மயக்கத்தில் இருந்த மக்னா யானையை வனத்துறையின் வாகனத்தில் ஏற்றிச் சென்ற வனத்துறையினர், மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையை சுற்றியுள்ள வெள்ளியங்காடு வனப்பகுதியான கூடப்பட்டி என்னுமிடத்தில் விடுவிக்க திட்டமிட்டனர். இதன்படி மக்னா யானையை ஏற்றிய லாரி வெள்ளியங்காடு கிராமத்தை அடைந்தது. அப்போது அங்கிருந்த விவசாயிகளும் ஊர் மக்களும் ஒன்று திரண்டு லாரியை மறித்தனர். யானை ஏற்றபட்டிருந்த வாகனத்தை சுற்றி வளைத்த கிராம மக்கள், சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கெனவே யானைகளின் தொல்லையால் பயிர் மற்றும் உயிர் சேதங்களை சந்தித்து வரும் நிலையில், விவசாய பயிர்களை உண்டு பழகிய மேலுமொரு யானையை இப்பகுதியில் விட அனுமதிக்க இயலாது என வனத் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் காரணமாக காவல் துறையினர் வரவழைக்கபட்டனர். இருதரப்பினரும் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடித்தது. இதனையடுத்து வேறு வழியின்றி பின்வாங்கிய வனத் துறையினர் யானை கொண்டு வரப்பட்ட வாகனத்தை திருப்பிக் கொண்டு சென்றனர்.

இதைத் தொடர்ந்து அந்த யானை மேட்டுப்பாளையத்தில் உள்ள வனத்துறைக்குச் சொந்தமான அரசு மரக்கிடங்கு வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டு நிறுத்தப்பட்டது. மக்களின் எதிர்ப்பு காரணமாக பிடிபட்ட யானையை எங்கு விடுவது என்பதில் சிக்கல் உருவாகியது. சிறுமுகை வனப்பகுதில் யானையை விடுவது குறித்தும் அல்லது ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு யானையினை கொண்டு சென்று விடுவதா என்பது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணிநேர ஆலோசனைக்கு பின்னர் யானையை ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் வால்பாறை அருகே மானாம்பள்ளி என்ற காட்டில் விடுவிக்க முடிவெடுக்கப்பட்டது.

இதனிடையே வாகனத்தில் ஏற்றி நிறுத்தபட்டிருந்த யானைக்கு மயக்கம் முழுமையாக தெளிந்தால் பிரச்னை உருவாகும் என்பதால் வனத்துறை மருத்துவர்களின் ஆலோசனைப்படி அதற்கு மீண்டும் துப்பாக்கி மூலம் செலுத்தப்படும் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. மீண்டும் அரை மயக்கத்திற்குச் சென்ற மக்னா யானை, சுமார் இருபது மணி நேரங்களுக்கு மேலாக தொடர்ந்து மயக்க ஊசியின் தாக்கத்தில் இருப்பது, வனத்துறை வாகனமான லாரியில் ஏற்றப்பட்டு ஒரே குறுகிய இடத்தில் நிற்பது என யானை சோர்வுடன் காணப்பட்டது. இறுதியில் யானை மேட்டுப்பாளையம் அரசு மரக்கிடங்கில் இருந்து மீண்டும் ஆனைமலை புலிகள் காப்பக காட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டது.