விருத்தாசலம் அருகே கல்லூரி மாணவி குத்தி கொலை செய்யப்பட்டதை கண்டித்து கருவேப்பிலங்குறிச்சியில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருக்கே உள்ள கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரின் மகள் நேற்று முன் தினம் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். கல்லூரி மாணவியான இவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மாணவியை கொலை செய்ததாக ஆகாஷ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்லூரியிலிருந்து திரும்பிய அந்த மாணவி தனியாக இருந்த போது ஆகாஷ் என்ற இளைஞர் வீடு புகுந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த வாக்குவாதமே கொலையாக மாறியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் காதலிக்க மறுத்ததால் மாணவியை ஆகாஷ் கொலை செய்துவிட்டதாகக் கூறி, கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அத்துடன் மக்கள் மாணவிக்கு ஆதரவாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவல்நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க கோரிக்கை விடுத்தனர்.
கொலை செய்த ஆகாஷை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யவும் வலியுறுத்தினர். மாணவி கொலையை அடுத்து விருத்தாசலம் பகுதியில் இரு சமூகத்தினர் இடையே பதற்றமான சூழல் உருவானதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.