அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைதை கண்டித்து, கோவை சிவானந்தா காலனி பகுதியில் வரும் 16ஆம் தேதி கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை டாட்டாபாத் அருகே உள்ள மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதை கண்டித்து அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. மாநகர மாவட்டச் செயலாளர் கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த செயற்குழுவில் 70-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த அவசர செயற்குழுவில் மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து கோவை சிவானந்தா காலனி பகுதியில் வரும் 16 ஆம் தேதி மத்திய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என செயற்குழுவில் மாநகர மாவட்ட செயலாளர் கார்த்திக் அறிவித்துள்ளார். அந்த கண்டன பொதுக் கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், திராவிட கழகத் தலைவர் வீரமணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா, காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
50,000 பேர் வரை இந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாக மாநகர மாவட்டச் செயலாளர் கார்த்திக் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.