மதுரையில் நடைபெற்று வரும் கீழடி தொல்லியல் கண்காட்சியை பொதுமக்கள் காண ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவரை 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீழடியில் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 2019 வரை தமிழக தொல்லியல் துறை சார்பில் 4-வது மற்றும் 5-ம் கட்ட அகழாய்வு நடைபெற்றது. இதில் கண்டறியப்பட்ட தொன்மையான தொல்லியல் பொருட்களின் கண்காட்சி மதுரை உலக தமிழ்சங்க வளாகத்தில் கடந்த நவம்பர் 1-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
பைந்தமிழர்களின் வாழ்க்கை முறையை எடுத்துரைக்கும் வகையிலான தங்க ஆபரணங்கள், மண்பாண்ட பொருட்கள், சுடுமண் உருவம், தமிழி எழுத்து பொறித்த பானை ஓடுகள், சுடுமண் காதணிகள், மண் குடுவை, கண்ணாடி மணிகள் உள்ளிட்ட 6820 பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
3 அரங்குகள் அமைக்கப்பட்டு நடைபெறும் கண்காட்சியை காண நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் வந்து செல்கின்றனர். தற்பொழுது வரை 13 ஆயிரத்து 500 பேர் கண்காட்சியை பார்வையிட்டு சென்றுள்ளதாகவும் நாளுக்கு நாள் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பொதுமக்கள், கண்காட்சியில் உள்ள தொன்மையான பொருட்கள் மிகவும் ஆச்சர்யப்பட வைக்கிறது என தெரிவித்துள்ளனர்