தமிழ்நாடு

சென்னை: தலைமைச் செயலர் இறையன்பு காரை வழிமறித்து கோரிக்கை வைத்த பொதுமக்கள்

சென்னை: தலைமைச் செயலர் இறையன்பு காரை வழிமறித்து கோரிக்கை வைத்த பொதுமக்கள்

webteam

தலைமைச் செயலாளர் இறையன்பு காரை வழிமறித்து கோரிக்கை மனு கொடுத்த கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது. கோரிக்கையை கேட்க காரில் இருந்து இறங்கிய இறையன்புவின் காலில் விழ முற்பட்ட பெண்ணை, தடுத்து நிறுத்தி கோரிக்கை பரிசீலனை செய்யப்படும் என உறுத்தியளித்தார் அவர்.

சென்னை பூண்டி கிராமத்திலுள்ள பொது மயானப்பாதை பல வருடங்களாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தக் கிராம மக்கள் இறந்த உடல்களை 3 கிலோமீட்டர் தொலைவிற்கு சுற்றி மயானத்திற்கு எடுத்து செல்லும் நிலை உள்ளது. இந்நிலையில் இன்று தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது பூண்டி ஏரியில் ஆய்வு மேற்கொள்ள சென்ற இறையன்புவின் வாகனத்தை பூண்டி கிராம மக்கள் வழிமறித்தனர்.

உடனே இறங்கி சென்ற தலைமைச் செயலாளர் இறையன்பு, பொதுமக்களின் கோரிக்கையை கேட்டறிந்தார். அப்போது அங்கிருந்த பெண்ணொருவர் இறையன்புவின் காலில் விழுந்தார். அவரை இடைமறித்து தடுத்து நிறுத்திய தலைமைச் செயலாளர் இறையன்பு, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

அதன் பின்னர் நடந்து சென்று பூண்டி ஏரியை பார்வையிட்ட இறையன்பு, பருவ மழை முன்னெச்சரிக்கை குறித்து ஆய்வு நடத்தினார். பின்னர் திரும்பி செல்லும் போதும், வழியில் நின்ற பூண்டி கிராம மக்களிடம் பேசிய இறையன்பு கோரிக்கை பரிசீலனை செய்யப்படும் என தெரிவித்தார்.

- பால வெற்றிவேல்