தமிழகத்தில் வெயில் அதிகரிப்பதால் காய்ச்சல், சளி, இருமல் போன்றவை பரவி வருகின்றன. பொதுசுகாதார நிபுணர்கள் முகக்கவசம் அணிந்து, கைகளை அடிக்கடி கழுவி, நெருங்கிய தொடர்பை தவிர்க்குமாறு அறிவுறுத்துகின்றனர்.
தமிழகத்தில் பனிப்பொழிவு குறைந்து வெயில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த சீதோஷ்ண நிலை மாற்றத்தால், காய்ச்சல், சளி, இருமல், உடல்சோர்வு, வாந்தி, பேதி உள்ளிட்டவற்றால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தசூழலில் மக்களுக்கு முக்கியமான அறிவுரையை பொது சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
தற்போது பரவி வருவது ப்ளூ என்ற இன்ப்ளுயன்ஸா வகை காய்ச்சல் என்றாலும், அதிகளவில் மக்கள் பாதிக்கப்பட்டு வருவதால், முன்தடுப்பு அவசியம் என பொது சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்ப்ளுயன்ஸா, டைஃபாய்டு போன்ற காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர் முகக்கவசம் அணிவதன் வாயிலாக, குடும்பத்தினருக்கோ மற்றவர்களுக்கோ வைரஸை பரப்பாமல் தடுக்க முடியும் என பொதுசுகாதார நிபுணர் குழந்தை சாமி தெரிவித்துள்ளார்
அதேபோல், வீட்டில் இருப்போர் அடிக்கடி கைகளை கழுவுவதுடன்,பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பை தவிர்த்தாலே மற்றவர்களுக்கும் காய்ச்சல் பரவாமல் தடுக்கலாம் என அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல், டெங்கு காய்ச்சலை தடுக்க, வீட்டின் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றும், எவ்வித காய்ச்சல் என்றாலும், மருத்துவரிடம் சிகிச்சை பெறுவது அவசியம் என்றும் குழந்தைசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.