தேனி மாவட்டம், நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தால், கொடைக்கானல் மதிகெட்டான் சோலை, பேரரிஜம் ஏரி உள்ளிட்ட மேல்மலை கிராமங்கள் பாதிக்கும் அபாயம் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
நியூட்ரினோ துகள்கள் குறித்த ஆய்விற்கு தேனி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை இந்திய அரசு தேர்வு செய்தது. அதற்கு முன்பேமசனக்குடியில் அமைவதாக இருந்தது. அங்கே பலத்த எதிர்ப்புக்கள் எழவே அந்தத்திட்டம் தேனிக்கு மாற்றப்பட்டது. ஆனால் இங்கு அமைப்பத்தற்கும் தொடர்ந்து எதிர்ப்புக்கள் நிலவி வருகின்றன. பசுமை தீர்ப்பாய தடைகளை தாண்டி, முறைகேடாக மத்திய அரசு கட்டிடம் கட்ட அனுமதி வாங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தத் திட்டம் அமைக்கப்பட்டால் உலகின் மிக முக்கியமான சூழல் பகுதியான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலுள்ள பல கோடி ஆண்டுகள் மூத்த வயதுடைய, குவார்ட்ஸ் பாறைகள் அடங்கிய மண்டலங்களான, முல்லைப்பெரியாறு, அதனை அடுத்துள்ள குரங்கணி மலைப்பகுதிகள், அதன் மேல்மலைகளான கொடைக்கானல். மதிகெட்டான் சோலைகள், உலகின் தூய குடிநீர் பட்டியலில் முதல் ஐம்பது இடங்களில் இடம் பிடித்துள்ள பேரிஜம் நன்நீர் ஏரி, வேம்படி சோலை வனங்கள், கேரளாவை ஒட்டியுள்ள வந்தரேவு சோலைக்காடுகள் உள்ளிட்ட மலை வளங்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
உலக அணுக்கொள்கைகளில் கையெழுத்திட்டுள்ள இந்தியா, அமெரிக்காவின் உத்தரவுப்படி இயங்குவதாகவும், நியூட்ரினோ ஆய்வு என்பது அணுசக்தி, அணு ஆயுதம் உள்ளிட்ட அழிவு சக்திக்கும் சர்வதேச நாடுகளுக்கு ஆதிக்கம் செய்யவுமே பயன்படும் என்றும், இதனால் 20 ஆயிரம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பு ஏற்படும் என கூறுவது எதிர்காலத்தில் ஏற்படும் பேரழிவை மறைப்பதற்கான முயற்சியே என இயற்கை ஆர்வலர்கள் கவலையை தெரிவிக்கின்றனர்.
நியூட்ரினோ அணுத்துகள் ஆய்வில் அடிவாரத்தில் இருந்து மலையைக் குடைந்து, பல கிலோமீட்டர் தொலைவு உள் நுழைந்து சுரங்கங்கள் அமைத்து, ஆய்வுகள் செய்யும்போது, அணுச்சிதறல் ஏற்பட்டு மேற்குறிப்பிட்ட மலைச்சிகரங்கள் அனைத்தும் ஒரே நொடியில் சரியும் அபாயம் உள்ளதாக, நியூட்ரினோவை பற்றி தெரிந்தவர்கள் பெரும் கவலை கொள்கின்றனர். பல்வேறு அபாயமான சூழலால் மலைப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடன், இந்தத் திட்டம் வேண்டாம் என கூறுகின்றனர். தமிழக அரசும், இந்திய அரசும் இந்தத் திட்டத்தை உடனடியாக கைவிட கோரிக்கை விடுத்துள்ளனர்.